காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, இன்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
மே 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று (நேற்று) மாலையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின. இதில், பெங்களூரு எச்.ஏ.எல். அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மஃரிப் தொழுகைக்கான இடைவேளைக்குப் பின், இரவு 07.00 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாணவர் பி.ஹிஷாம் இறைமறை வசனங்களையோதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழக தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக செயலாளர் நோபில் ராஜன், இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணிகளின் பயிற்சியாளர்கள், ஈரணிகளின் சார்பாக வீரர்களுள் இருவர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், Ball Boysக்கு துவக்கமாக பரிசுகள் வழங்கப்பட்டது. அடுத்து, இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும், நடுவர்களுக்கும் தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் முதல் கோல் அடித்த பெங்களூரு எச்.ஏ.எல். அணியின் நைஜீரிய நாட்டு நட்சத்திர வீரர் இம்மானுவேலுக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் காலஞ்சென்ற எல்.கனீ நினைவாக விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டது. அவரது மகன் எல்.கே.லெப்பைத்தம்பி அவற்றை வீரரிடம் வழங்கினார்.
பின்னர், சிறப்பழைப்பளரான ஸ்ரீதர் ரோட்ரிகோவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முனைந்த அணியான நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணிக்கு கோப்பையும், ஹாங்காங் ஓ.பி.சி. நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 25 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
பின்னர், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு எச்.ஏ.எல். அணிக்கு “மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு” வெள்ளி சுழற்கோப்பையும், “ஆச்சி மசாலா” நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 35 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பழைப்பாளரான - தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழக தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, பரிசுகளை வெற்றிபெற்ற அணியினரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் நடப்பாண்டு சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா நிறைவில் பட்டாசு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுப்போட்டியின் துவக்கப்போட்டி முதல் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளையும், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், துணைச் செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், இணைப் பொருளாளர் கலாமீ செய்யித் உமர், சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ, பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை காயல்பட்டணம்.காம் உள்ளிட்ட இணையதளங்களில் வீடியோ நேரலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
ஒளிநேரலை ஏற்பாடு:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக் (கணனி தொழில்நுட்பம்)
‘DHL’ ஹரி (கணனி தொழில்நுட்பம்)
M.T.ஹபீப் முஹம்மத் (கேமரா)
S.M.J.ஜெய்னுல் ஆப்தீன் (கேமரா)
A.K.முஹம்மத் இம்ரான் (கேமரா)
A.S.அஷ்ரஃப் (நேர்முக வர்ணனை)
கலாமீ யாஸர் (நேர்முக வர்ணனை)
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்(உறுதுணை)
S.K.ஷமீமுல் இஸ்லாம் (உறுதுணை)
மே 30ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |