காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்த 26.05.2013 அன்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் விளையாட வைக்கும் இடங்களில் ஒன்றான சைக்குங் வெளிப்புற பொழுதுபோக்கு மையம் (Saikung Outdoor Recreation Center) என்ற இடத்தில், இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சிற்றுலா செல்வதற்காக, அன்று காலை 09.00 மணிக்கு ஓரிடத்தில் ஒன்று கூடி, மூன்று பேருந்துகளில் சிற்றுலா இடத்தை அனைவரும் வந்தடைந்தனர். ஹாங்காங்வாழ் காயலர் குடும்பத்தினர் மற்றும் விடுமுறையில் ஹாங்காங் வந்துள்ள காயலர்கள் என மொத்தம் 180 பேரை உள்ளடக்கிய சிற்றுலாக் குழு காலை 10.15 மணியளவில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தது.
துவக்கமாக, அனைவருக்கும் குளிர்பானம் பரிமாறப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், சிற்றுலா நிகழ்முறைகளை அனைவருக்கும் விளக்குவதற்காக நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியை, ஜனாப் எஸ்.எச்.அபுல்ஹசன் அவர்களின் மகன் ஹாஃபிழ் ஷாகுல் ஹமீது நுஐம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
பிறகு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், சிற்றுலா தலத்திலுள்ள விளையாட்டு வசதிகளைப் பற்றி விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் தங்களுக்கான மதிய உணவு கூப்பன்களைப் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அவரவர் தமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடக் களமிறங்கினர்.
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் - கால்பந்து, வில்வித்தை, உள்ளரங்க விளையாட்டுகள், இதர விளையாட்டுகளிலும் மகிழ்வுற பொழுதைக் கழித்தனர்.
லுஹர் தொழுகைக்குப் பின், காயலர்களால் நடத்தப்படும் செய்யத் புக்ஹாரா உணவகத்தில் இருந்து, மதிய உணவாக சூடான - சுவையான கோழி மற்றும் மீன் பிரியாணி தருவிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் கூட்டாக அமர்ந்து, ஆர்வமுடன் மதிய உணவு உண்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர், இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை நீக்கப்பட்டு நீச்சல் குளம் திறக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசை தீர நீராடி மகிழ்ந்தனர்.
இறுதியாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாங்காங் மற்றும் சீனாவில் காயலர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சார்பில் அப்பரிசுகளுக்கு அனுசரணையளிக்கப்பட்டிருந்தது. சிற்றுலாவில் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலி அவர்களின் துஆவுடன் மாலை 05.30 மணியளவில் சிற்றுலா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் மகிழ்ச்சியான நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
M.செய்யித் அஹ்மத்
M.ஷேக் அப்துல் காதர்
M.J.ஸிராஜுத்தீன்
U.நூஹ் |