தமிழகத்தில் 1983ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலாவது தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியான முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவரும், பொருளாளரும், கீழக்கரையைச் சேர்ந்தவருமான முனைவர் அல்ஹாஜ் செ.மு.ஹமீத் அப்துல் காதர், அலுவல் நிமிர்த்தமாக புது தில்லி சென்றிருந்தபோது, 06.06.2013 வியாழக்கிழமை (நேற்று) மாலை 06.48 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 81.
விரிவான விபரம் வருமாறு:-
முஸ்லிம் சமுதாயத்திற்கென கல்வி நிறுவனங்கள் பல இருந்தும், ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே என்ற ஆதங்கத்தில், 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார் அல்ஹாஜ் செ.மு.ஹமீத் அப்துல் காதர்.
இம்மருத்துவமனையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவதற்காக, மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் கே.ரஹ்மான் கானை சந்திக்க, தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, 05.06.2013 புதன்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் நடைபெற்றது.
மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்ததோடு, மருத்துவமனை திறப்பு விழாவில் தான் நிச்சயம் பங்கேற்பதாகவும் அப்போது உறுதியளித்தார் அமைச்சர் ரஹ்மான் கான்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அப்துல் ரஹ்மான் ஏற்பாட்டில், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியையும் மரியாதை நிமிர்த்தமாக அல்ஹாஜ். செ.மு.ஹமீத் அப்துல் காதர் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார். துணை ஜனாதிபதியும், அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்துவிட்டு, 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நெஞ்சு வலி அதிகமாகி உயிர் பிரிந்தது.
அன்னாரது ஜனாஸா சென்னைக்கு கொண்டு வருவதற்கான பணியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார்.
ஜனாஸா, வெள்ளிக்கிழமை (இன்று) காலை சென்னை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலையில், சென்னை ராயப்பேட்டை மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அன்னாரது மறைவிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், துபை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலீ, அதன் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மத் தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
டைமண்ட் செய்யித்
சென்னை. |