இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி நடைபெறும் திருமணங்களில், மணவிலக்கு சான்றளிக்க காஜிகளுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட கல்வி தின நிகழ்ச்சியின்போது தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நிறுவி, வழிநடத்திய கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 05ஆம் தேதியை, கல்வி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்திட்டங்களுள் ஒன்றாகும்.
அந்த அடிப்படையில், வழமை போல இவ்வாண்டும் ஜூன் 05ஆம் தேதி புதன்கிழமையன்று (நேற்று), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் கல்வி தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நகர துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அவர்களைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயிதேமில்லத் அவர்களால் நிறுவப்பட்டு, வழிநடத்தப்பட்ட நிகழ்வுகள், முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் தலைவராக அவர்கள் இருக்கையில் இந்திய நாட்டில் ஷரீஅத் சட்டத்திற்குக் கிடைத்த பாதுகாப்புகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி மற்றும் நஸூஹிய்யா மகளிர் மத்ரஸா ஆகியவற்றின் பேராசிரியரான மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ சிறப்புரையாற்றினார்.
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பொதுவாழ்வு இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட செய்திகளை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
பின்னர், பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மணவிலக்கு சான்றளிப்பதில் காஜிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்:
இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி நடைபெற்ற திருமணங்களில் மணவிலக்கு சான்று வழங்கும் உரிமை காஜிகளுக்கு இருக்கக் கூடாது; அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் திருமதி பதர் சயீத் (முன்னாள் எம்.எல்.ஏ.) வழக்கு தாக்கல் செய்திருப்பது, முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டவும், தொன்றுதொட்டு இருந்து வரும் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டைக் காப்பாற்றவும், நிக்காஹ் - மனமுறிவு உள்ளிட்ட விஷயங்களில் காஜிகளுக்கு உள்ள அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற, இந்த வழக்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்து, வழக்கை வலுவுடன் நடத்த மாநில தலைமைய இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 - ஆழ்வை தெப்பக்குளித்தின் மேல் பாலம் அமைத்தல்:
திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில், காயல்பட்டினத்திற்கு அருகில் இருக்கும் ஊரான ஆழ்வார்திருநகரியில், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தெப்பக்குளத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதும், அதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
எனவே, இந்துக்களின் மனம் புண்படாமலும், அதே நேரத்தில் பொதுமக்கள் நன்மைக்காக நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் வகையிலும், தெப்பக்குளத்தில் பாலம் அமைத்து, பிரச்சினைக்குத் தீர்வு காண, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - ஆதார் அட்டை குறித்த விழிப்புணர்வு:
அரசு தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் ஆதார் அட்டையும், எண்ணும் அவசியம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதார் அட்டையின் துணை கொண்டு - மத்திய அரசின் மானியங்கள் நுகர்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
எனவே, ஆதார் அட்டையின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்காக அரசு அதிகாரிகளோடு இணைந்து முகாம் நடத்தவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், முஸ்லிம் மாணவர் பேரவையும் பணிகளை மேற்கொள்ள இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், நகரப் பிரமுகர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட - நகர நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |