காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, 31.05.2013 அன்று பணி நிறைவு பெற்றதையடுத்து, அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி, இம்மாதம் 03ஆம் தேதி காலை 12.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்முறை:
பள்ளி துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பொருளாளர் ஹாஜி எல்.கே.கே.செய்யித் அஹ்மத், நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி எல்.டி.இப்றாஹீம், ஹாஜி எம்.கனீ, ஹாஜி கே.எஸ்.ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
பள்ளி ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விடைபெறும் தலைமையாசிரியரை வாழ்த்திப் பேசினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
பல்லாண்டு காலமாக இப்பள்ளியின் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அவர்கள், தான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் பல நெருக்கடியான சூழ்நிலைகளை திறம்பட சமாளித்து சாதனை புரிந்துள்ளார்.
பள்ளியை அவர் வழிநடத்திய காலகட்டத்தில் பிரச்சினைகள் வரும்போதெல்லாம், நிர்வாகத்திற்கு அதனைத் தெரிவிக்கையில் ஒருமுறை கூட சக ஆசிரியர் யாரையும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பிரச்சினைக்கு நாசூக்காக தீர்வு காண்பதில் மட்டுமே முனைப்புடன் இருந்த அவர், நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்குமிடையே உள்ள புரிந்துணர்வு சேதப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார்.
இவ்வாறு, பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப் உரையாற்றினார்.
முன்னாள் தலைமையாசிரியர், தாளாளர், ஆசிரியர்கள் வாழ்த்துரை:
அவரது உரையைத் தொடர்ந்து, பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும், இந்நிகழ்ச்சியின் சிறப்பழைப்பாளருமான டி.ஞானய்யா, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்திப் பேசினர்.
சால்வை மரியாதை:
பின்னர், விடைபெறும் தலைமையாசிரியர், முன்னாள் தலைமையாசிரியர், முன்னாள் தலைமையாசிரியர் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஆசிரியர்கள் சார்பிலும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
தங்க நாணயம் அன்பளிப்பு:
பள்ளி ஆசிரியர்களிடையே ஒரு மரபு பேணப்பட்டு வருகிறது. அதாவது, பணி நிறைவு பெறும் ஆசிரியரை வழியனுப்புகையில், அனைத்து ஆசிரியர்களின் சார்பாக, அடுத்து பணி நிறைவு பெறவுள்ள ஆசிரியர் தன் கையால் ஒரு சவரன் தங்க நாணயத்தை நினைவுப் பரிசாக வழங்குவதுதான் அந்த மரபு.
அதன்படி, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக, அடுத்து பணி நிறைவு பெறவுள்ள ஆசிரியர் டேவிட் செல்லப்பா, விடைபெறும் தலைமையாசிருக்கு ஒரு சவரன் தங்க நாணயத்தை தன் கையால் வழங்கினார்.
பாராட்டு விருது:
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி எல்.கனீ அவர்களின் நினைவாக, அவரது மகன் ஹாஜி எல்.கே.லெப்பைத் தம்பி, விடைபெறும் தலைமையாசிரியருக்கு விருது வழங்கி கண்ணியப்படுத்தினார்.
விடைபெறும் தலைமையாசிரியர் ஏற்புரை:
நிறைவாக, பள்ளியின் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஏற்புரையாற்றினார். அவரது உரையின் உள்ளடக்கம் வருமாறு:-
1980ஆம் ஆண்டு, இப்பள்ளியின் ஆசிரியராக எனது கல்விப் பணியை இறையருளால் துவங்கினேன். 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன்.
தலைமையாசிரியர் தேர்வு:
நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றபோது - எனக்கும், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும் போட்டி நிலவியது. ஆசிரியர் புகாரீ அவர்கள் என்னைத் தவறாகக் கருதிவிடக் கூடாது. சில நிகழ்வுகளைக் குறிப்பிட வேண்டும் என்பதற்காகவே இதை இங்கே தெரிவிக்கிறேன்...
நிர்வாகிகளின் ஒத்துழைப்பு:
அந்நேரத்தில் இருவருக்கும் சமமான ஆதரவு இருந்த நிலையில், என்னை அதற்கு முன் பார்த்தேயிராத ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள் எனக்கு ஆதரவாக ஒரு வாக்களிக்க, அதன் காரணமாகவே நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். ஒரு தலைமையாசிரியராக இன்று எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்ததற்கு, அந்த ஒரு வாக்கு பயன்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுபோல, நான் தலைமையாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருதி, அதற்காக முனைப்புடன் செயல்பட்டவர்கள்தான் நம் பள்ளியின் முன்னாள் தாளாளர்களான மர்ஹூம் ஹாஜி ஏ.கே.செய்யித் அஹ்மத், மர்ஹூம் ஹாஜி இஸ்மத் ஆகியோர். அதுபோலவே எனக்கு ஆதரவளித்தவர்கள் மர்ஹூம் ஹாஜி ஏ.எஸ்.நூஹ், ஹாஜி எஸ்.ஓ.கியாது சேட் ஆகியோர். அவர்களுக்கெல்லாம் இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பு நிர்வாகிகளின் ஒத்துழைப்பு:
இப்போது, இப்பள்ளியை தலைமையேற்று திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கும் ஹாஜி டாக்டர் அஷ்ரஃப், தாளாளராக உள்ள ஹாஜி டாக்டர் முஹம்மத் லெப்பை ஆகியோரின் ஒத்துழைப்பும் மகத்தானது. பள்ளிக்கென எதைக் கேட்டாலும், “ஏன், எதற்கு” என்று கேட்காமல் செய்து தருபவர்கள் இவர்கள்... என் மீது அவர்களுக்கு அந்தளவுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கும் இந்த நல்ல நேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்களுடன் இடைவெளி...
ஆசிரியராக எனது பணியைச் செய்த காலத்தில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எல்லோரையும் போல நானும் ஓர் ஆசிரியன் என்ற முறையில், எனது பணியைக் குறைவின்றி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
ஆனால், தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் என் நிலை அப்படியே மாறிவிட்டது. மனம் விட்டுப் பழகிய சக ஆசிரியர்களிடையேயும் சிறிது இடைவெளியுடன் பழக வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானேன். அந்தப் பொறுப்பில் அப்படித்தான் செயல்பட இயலும் என்பதை அனைவரும் நன்கறிவீர்கள்.
என்னைப் புரிந்துகொண்ட ஆசிரியர்கள்...
ஆனால், எனக்கிருக்கும் பெரும் மகிழ்ச்சி என்னவென்றால், என்னுடன் சக ஆசிரியராகப் பணியாற்றிய அதே ஆசிரியர்கள் - நான் தலைமையாசிரியரானதும், என் நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு முழு ஒத்துழைப்பளித்ததுதான்.
மறக்க முடியாத இருபெருமக்கள்...
அடுத்து, நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில், என்னால் என் வாழ்வு முழுக்க மறக்கவே முடியாத அளவில் இரண்டு பெருந்தகைகள் உள்ளனர். ஒருவர், நம் பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள். மற்றொருவர், பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி எல்.கனீ அவர்கள். இவ்விருவரும், நான் தலைமையாசிரியராக இருந்தபோது நிர்வாக ரீதியாக அளித்த ஒத்துழைப்புகளையும், நெருக்கடியான நேரங்களில் தோளோடு தோள் நின்று உதவியதையும் சொல்லத் துவங்கினால் இந்தக் குறைந்த நேரம் போதாது. இறைவன் அவர்களது சேவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பள்ளியில் ஏற்பட்ட மாற்றங்கள்:
இப்பெரியவர்களின் கீழ் நான் தலைமையாசிரியராக இருந்தபோதுதான், நம் பள்ளிக்கு ஆய்வகம் (லேப்) இடமாற்றம் செய்யப்பட்டது. 1984ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் அனுசரணையில் - இயற்பியல், வேதியல், உயிரியல் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. இந்த சிறப்பு நானறிந்த வரை நம் பகுதியில் வேறெந்தப் பள்ளியிலும் இல்லாத ஒன்று.
கூலக்கடை பஜாரிலுள்ள கட்டிடத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளியும், இந்த தாமரை ஸ்கூல் பில்டிங்கில் எல்.கே.துவக்கப்பள்ளியும் இயங்கி வந்தன. தாமரை ஸ்கூல் கட்டிடத்திற்கு எதிரில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆய்வகம் செயல்பட்டு வந்தது.
இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டும், பள்ளியும் - ஆய்வகமும் ஒரே இடத்தில் இருந்தால் வசதியாக இருக்குமே என்று கருதியும், 1999ஆம் ஆண்டு பள்ளியின் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, இந்த யோசனையை பள்ளி நிர்வாகத்திடம் நான் முன்வைத்தேன். உடனடியாக அது ஏற்கப்பட்டதன் விளைவே, இன்று இப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது.
அதுபோல, இக்கட்டிடத்தில் பல வகுப்பறைகளைக் கொண்ட ஹாஜி எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக் புதிததாகக் கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக ஒரு வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
நம் பள்ளியின் முன்னேற்றத்திற்காக நான் எதைக் கேட்டாலும் மறுக்காமல் தருவதை வழமையாகவே கொண்டிருந்தவர்கள் மர்ஹூம் எல்.கனீ அவர்கள். அவர்கள் தந்த ஊக்கம்தான் இன்று எனது பொறுப்பை இயன்றளவு சிறப்புற செய்திட வழிவகுத்தது.
இப்பெரியவர்களின் ஒத்துழைப்புகளுக்கு ஒற்றைச் சொல்லில் “நன்றி” என்று சொன்னால் அது திருப்தியாகாது. (இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோதே அவரது கண்களில் கண்ணீர் மல்கியது.)
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு:
அடுத்து, சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பை நான் மறக்கவே முடியாது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பில்லாமல் ஒரு தலைமையாசிரியர் செயல்படவே முடியாது. இவ்வாறிருக்க, ஒரு தலைமையாசிரியராக என்னை நம் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் ஆசிரியர்கள் என்பதை மனதிற்கொண்டவனாக நான் அவ்வப்போது - உத்தரவாக இல்லாமல் நான் அவர்களிடம் கூறும் வேலைகளையெல்லாம் சிரமேற்கொண்டு சிறப்புற செய்து தருவார்கள்.
அலுவலர்களின் அர்ப்பணிப்பு:
அடுத்து, நம் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களான தம்பி மகாராஜன், ஆனந்தக் கூத்தன், முஹம்மத் முஹ்யித்தீன், ராமலிங்கம் ஆகியோரையெல்லாம் நான் மறக்கவே முடியாது. அதுபோல, பணி நிறைவு பெற்ற அலுவலர் அன்வர், மறைந்த முருகன், சுடலை ஆகியோரின் சேவைகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.
இவர்களெல்லாம், பள்ளிக்குள் வந்துவிட்டால் எவ்வித கவனச் சிதறலும் இன்றி, கடமையே கண்ணாக செயல்பட்டவர்கள். நான் ஏதாவது ஒரு தேவைக்காக ஒரு பொருளைக் கேட்க வாய் திறக்கும்போதே, என் நோக்கமறிந்து அவற்றைக் கொண்டு வந்துவிடுவார்கள். அத்தனை ஈடுபாடு மிக்கவர்கள்.
அதுபோல, இப்பள்ளியின் கணனி ஆசிரியர் தம்பி புகாரீயையும் இங்கே குறிப்பிட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிக்கூடம் என்றால், பள்ளி சார்ந்த பணிகள் மட்டுமே இருக்கும்... ஆனால் இன்று, அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்காக பலமுறை கணனியில் வேலை பார்த்து சிரமப்பட வேண்டிய நிலை. அப்போதுதான் ஒரு ஆவணம் டைப் தயாரிக்கப்பட்டிருக்கும். சில நிமிடங்களிலேயே அதை மாற்ற வேண்டியது வரும். ஆயத்தம் செய்த ஆவணங்களை பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவற்றையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்துகொண்டிருக்கிறார் இவர்.
மாணவர்களிடம் கண்டிப்பு:
நான் மாணவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்துகொள்வேன்... ஆசிரியராக நான் பணியாற்றிய காலங்களில் பெரும்பாலும் பிரம்பை எடுத்ததில்லை. தலைமையாசிரியரான பிறகு அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது. ஏனெனில் நம்மூர் மாணவர்கள் அதற்கு மட்டும்தான் கட்டுப்படுவார்கள்...
தலைமையாசிரியரான புதிதில் ஒருமுறை பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், என் கையில் புதிதாகப் பிரம்பு இருப்பதைப் பார்த்து வியப்புடன் கேட்டார். அப்போதுதான் நான் கையில் பிரம்பு வைத்திருப்பதையே உணர்ந்தேன்.
பாரபட்சமின்மை:
பிரம்பைக் கையில் எடுத்துவிட்டால், மாணவன் யார் என்று பார்ப்பதில்லை. தப்பு செய்பவன் நிர்வாகியின் மகனாக இருந்தால் அவனுக்குத்தான் அதிகமாக அடி விழும். அதைப் பார்க்கும் மற்ற மாணவர்கள், நிர்வாகி மகனுக்கே இந்நிலை என்றால் நமக்கு என்ன நிலையோ என்று எண்ணி, சரியாக நடந்துகொள்வார்கள்...
அன்பே உருவான மாணவர்கள்:
படிக்கும் காலத்தில் பல மாணவர்கள், செய்த தவறுகளுக்காக என்னிடம் நிறைய தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஆனால், நான் கூட அவற்றை மறக்காத இக்காலத்திலும், தண்டனையைப் பெற்ற அம்மாணவர்கள் அதை தங்கள் மனதிலேயே வைக்காமல், எதுவும் நடக்காதது போல என்னிடம் இன்றளவும் பாசமாகப் பழகி வருகின்றனர்.
இதுதான் நம் பள்ளி மாணவர்கள். நடந்தவற்றையெல்லாம் மனதிற்கொள்ளாமல், அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கும் இந்த மனநிலை இந்த ஊர் மக்களுக்கே உரிய அழகான பண்பு என்பதை மனமுவந்து கூறுகிறேன்...
இறைவனுக்கு நன்றி:
நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களைப் பற்றியெல்லாம் ஓரளவுக்குக் கூறிவிட்டேன். இவையனைத்திற்கும் மேலாக, எல்லாம்வல்ல அல்லாஹ்வின் கருணையும், கிருபையும் இருந்ததாலேயே என்னால் இயன்றளவு சிறப்புற செயல்பட முடிந்தது. அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
மாணவர்களின் சாதனைகள்:
நான் தலைமையாசிரியராக இருந்த காலத்தில், இப்பள்ளி மாணவர்கள் பல விதங்களில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் என்ற பதிவு...
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1177 என்ற மகத்தான மதிப்பெண்... இந்த மதிப்பெண்தான் இன்றளவும் நம் பள்ளியின் உயர்ந்த மதிப்பெண்ணும், அந்த ஆண்டின் - தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் மதிப்பெண்ணும் ஆகும்.
அதுபோல, விளையாட்டை எடுத்துக் கொண்டால், அண்மையில் நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாம்பியனாகி சாதனை நிகழ்த்தியது...
இன்றளவும் நிறைவேறாத ஆசை:
இவையெல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாதனைகள். இன்னொரு ஆசையும் எனக்கிருந்தது... நான் தலைமையாசிரியராக இருக்கும்போதே நம் பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பிலோ, 12ஆம் வகுப்பிலோ மாநில அளவில் முதலிடங்களைப் பெற்றிட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
அது என் காலத்தில் நிறைவேறவில்லை என்றாலும், புதிதாக தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அவர்களின் காலத்தில், அது நிகழும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவர்கள் பல சாதனைளைப் படைத்திட நான் பிரார்த்திக்கிறேன்.
புதிய தலைமையாசிரியருக்கு ஒத்துழைப்பு:
இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் எனக்களித்த அதே ஒத்துழைப்பை புதிய தலைமையாசிரியருக்கும் நிறைவாக வழங்கி, நம் பள்ளி இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட இணைந்து செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மகத்தான பொறுப்பு:
ஆசிரியர் பொறுப்பு என்பது சிரமமானதுதான் என்றாலும் கூட எளிதில் சமாளிக்கக் கூடியது. ஆனால், தலைமையாசிரியர் பொறுப்பு என்பது அவ்வாறல்ல! அது முற்றிலும் மாறுபட்டது.
ஒரு தலைமையாசிரியராக, அரசு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய மிகவும் மகத்தான பொறுப்பு அது. அப்பொறுப்பை, புதிய தலைமை ஆசிரியர் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செய்து, நம் பள்ளியை வளர்ச்சிப் பாதையில் உயர உயர கொண்டு செல்ல வேண்டும் என அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்...
அமானிதம் ஒப்படைப்பு:
சில ஆண்டுகளுக்கு முன், துபை காயல் நல மன்றம் சார்பில், சிறந்த பள்ளிக்கான பணப்பரிசாக நம் பள்ளிக்கு ரூபாய் 30 ஆயிரம் கிடைத்தது. அத்தொகையிலிருந்து ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் (வாட்டர் ஃபில்டர்) வாங்கி நிறுவப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை, புதிய தலைமையாசிரியரிடம் செலவுக் கணக்குடன் ஒப்படைத்துள்ளேன்.
பள்ளி நிர்வாகிகள் தலைமையாசிரியருடன் எந்த நேரத்திலும் தொடர்புகொள்வதற்காக உள்ள சிறப்புத் தொலைபேசியையும் புதிய தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளேன்.
உள்ளத்தை வைத்துவிட்டு விடைபெறுகிறேன்...
எல்லா வகையிலும் மனநிறைவோடு உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்... நான் இப்பள்ளி விட்டும் - ஓர் ஆசிரியனாகத்தான் பிரிந்து செல்கிறேனே தவிர, என் உள்ளம் எப்போதும் இப்பள்ளியைச் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கும்... இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் ஊரிலிருக்கும்போதெல்லாம் வந்து கலந்துகொள்வேன்... பள்ளியைப் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் கவனித்தவனாக இருப்பேன்...
நெஞ்சார்ந்த நன்றி:
உங்கள் யாவரின் மேலான – ஈடு இணையற்ற ஒத்துழைப்புகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்த நிறைவான நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள்கூர்ந்து மன்னியுங்கள்!
கண்ணியத்திற்குரிய இப்பள்ளியின் நிர்வாகிகளே...! ஆசிரியர்களே...! அலுவலர்களே...! என் பணிக்காலத்தில், ஆசிரியராகவோ, தலைமையாசிரியராகவோ - நான் அறிந்தோ, அறியாமலோ - சொல்லாலோ, செயலாலோ உங்களில் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக இந்த நேரத்தில் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். (இவ்வாறு சொன்னதும், தொடர்ந்து உரையாற்ற இயலாமல் சுமார் இரண்டு நிமிடங்கள் விம்மி விம்மி அழுதார்... அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைத்து நிர்வாகிகளும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கண்ணீர் மல்க நிசப்தமாக இருந்தனர்.)
(தொடர்ந்து பேசிய அவர்,) உங்களில் யாராவது என்னால் மனம் புண்பட்டிருந்தால், உங்களில் ஒருவனாக - உங்கள் சகோதரனாக என்னைக் கருதி, மன்னிக்க வேண்டும்.
அதுபோல, இங்கே வருகை தந்துள்ள நம் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் அவர்கள் என் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தவர்கள்... அவர்கள் ஓய்வுபெற்றபோது, ஏதோ ஒரு காரணத்தால் என்னை அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டமைக்காக, அவர்களிடமும் இந்நேரத்தில் நேரடியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, உங்கள் யாவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி... அஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு, விடைபெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.
புதிய தலைமையாசிரியர் உரை:
அடுத்து பேசிய, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், “ஒரு குடும்பத்தில் தந்தையோ, மூத்த சகோதரரோ எப்படி தன் மகனையோ - இளைய சகோதரனையோ வழிநடத்துவார்களோ, அப்படித்தான் எங்களை தலைமையாசிரியர் வழிநடத்தினார்... இதில் வருத்தப்படுமளவுக்கு எங்கள் மனதில் எதுவுமில்லை... விடைபெறும் எங்கள் மூத்த சகோதரரின் இனி வருங்காலமும் ஒளிமயமாக அமைந்து, அவர்தம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திட ஆசிரியர்களாகிய நாங்கள் யாவரும் வாழ்த்தி துஆ செய்கிறோம்” என்றார்.
நன்றியுரை:
நிறைவாக, பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றி கூறினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
விடைபெறும் தலைமையாசிரியர் முஹம்மத் ஹனீஃபா ஒரு சிறந்த ஆசிரியர்... ஒரு முன்னுதாரணமான நிர்வாகி... கண்ணால் பார்த்தே யாவரையும் இயக்குவார்... எங்கு கண்காணிப்பு நன்றாக உள்ளதோ, அங்கு வளர்ச்சி நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில், இவரது தீவிர கண்காணிப்பில் இப்பள்ளி பன்மடங்கு வளர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
இதற்கெல்லாம் நல்ல ஆளுமைத் திறன் அமைய வேண்டும். அதை இறைவன் வெகு சிலருக்கே கொடுப்பான். அவ்வாறு கொடுக்கப்பட்டவர்தான் இவர்.
இவர் ஆசிரியராக பாடம் நடத்திய காலத்தில், எனக்கும் - இவருக்கும் நல்ல போட்டி இருக்கும். அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
இவர் தலைமையாசிரியராக இருக்கையில்தான், நம் பள்ளியிலிருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்து, இன்று அவர்களுள் பலர் பல்துறை மருத்துவர்களாகத் திகழ்கின்றனர்.
இவரது காலத்தில், நல்ல வகுப்பறைகள், தேவையான உபகரணங்கள், சுத்தமான - சுகாதாரமான பள்ளி வளாகம் என பள்ளியின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று தன்னிறைவுடன் காட்சியளிக்கிறது.
மாணவர்களின் கல்வி தவிர இதர துறைகளிலும் அவர்கள் மிளிர வேண்டும் என்ற தீராத தாகமுடையவர் இவர். அதனால்தான், இப்பள்ளியிலிருந்து மாணவர்கள் யாரேனும் பேச்சுப்போட்டி போன்ற போட்டிகளுக்காக வெளியிடங்களுக்குச் சென்றாலும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்வார்.
இவரது தலைமையில், நம் பள்ளி 10ஆம் வகுப்பிலும், 12ஆம் வகுப்பிலும் 95 சதவிகிதத்திற்கும் குறைவாக ஒருபோதும் ரிசல்ட் பெற்றதில்லை.
இவரது தலைமையின் கீழ் இரண்டாண்டுகள் நான் உதவி தலைமையாசிரியராகப் பணியாற்றியதை, நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.
படிப்பில் தரம் குறையும் மாணவர்களை அழைத்து, இவர் வழங்கும் கவுன்சிலிங் தன்னிகரற்றது.
இத்தனை காலம், அரசு - நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - அலுவலர்கள் - மாணவர்கள் - பெற்றோர் என பலரோடும் காலந்தள்ளி, குடும்பத்திற்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டார். இனி, அவர் தனது மனைவி - மக்கள் - பேரன், பேத்திகள் என அனைவரோடும், எல்லா வளமும் - நலமும் பெற்று, மகிழ்வுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டியவனாக, அவரது கல்விச் சேவைக்கு இப்பள்ளியின் அனைத்து அங்கத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு, ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றியுரையாற்றினார். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் சில முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
குழுப்படம்:
பின்னர், விடைபெறும் தலைமையாசிரியருடன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
விருந்துபசரிப்பு:
அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு:
முன்னதாக, இம்மாதம் 01ஆம் தேதியன்று காலை 09.30 மணியளவில், விடைபெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மதிடம் முறைப்படி பொறுப்புகளைக் கையளித்தார்.
பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் குறித்த விபரக் குறிப்புகள்:
பெயர்:
எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா
பெற்றோர் பெயர்:
எம்.ஏ.கஃபூர் - ரஹீமா
பிறந்த தேதி:
07.03.1955
பூர்விக முகவரி:
பாவநாசபுரம்,
ஆணைக்குளம் அஞ்சல்,
சுரண்டை தாலுகா, நெல்லை மாவட்டம்.
தற்போதைய முகவரி:
காயிதேமில்லத் நகர்,
காயல்பட்டினம்.
கல்வித் தகுதி:
M.Sc., M.Ed.,
பணி விபரங்கள்:
1980ஆம் ஆண்டு எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
1980 முதல் 1995ஆம் ஆண்டு மே மாதம் வரை ஆசிரியராக 14.5 ஆண்டு காலம் பணியாற்றினார்.
1995ஆம் ஆண்டு ஜூன் முதல் 2013ஆம் ஆண்டு வரை தலைமையாசிரியராக 18 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
புதிய தலைமையாசிரியர் குறித்த விபரக் குறிப்புகள்:
பெயர்:
எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத்
பெற்றோர் பெயர்:
எம்.ஏ.ஃபாரூக் - சுலைஹா பீவி
பிறந்த தேதி:
03.04.1963
பூர்விக முகவரி:
செல்வமருதூர்,
திசையன்விளை,
நெல்லை மாவட்டம்.
தற்போதைய முகவரி:
காயிதேமில்லத் நகர்,
காயல்பட்டினம்.
கல்வித் தகுதி:
M.Sc., M.Ed., M.Phil.,
பணி விபரங்கள்:
1987ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தார்.
1987 முதல் 1990 வரை ஆந்திர மாநிலத்திலுள்ள அக்வா கல்சர் துறையில் பணியாற்றினார்.
1991 - 1992ஆம் கல்வியாண்டில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆணைக்கார் அப்துல் ஷுக்கூர் ஓரியண்டல் மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1992 இறுதியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1995ஆம் ஆண்டு, முதுநிலை பட்டதாரி ஆசிரியராக தரமுயர்வு பெற்றார்.
01.06.2013 அன்று, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
ஆசிரியராகப் பணியாற்றிய காலங்களில், 15 ஆண்டுகள், பள்ளியின் நாட்டு நலப்பணித் (NSS) திட்ட அலுவலராகப் பணியாற்றினார்.
இதர திறமைகள்:
1984ஆம் ஆண்டு கராத்தே தற்காப்புக் கலையில் கருப்புப் பட்டை (Black Belt) தேர்ச்சி பெற்றார்.
1992ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, ஆசிரியர் பணிக்கிடையில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கராத்தே பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்களில் உதவி:
S.B.B.புகாரீ
ஆசிரியர்
எல்.கே.மேனிலைப்பள்ளி
[செய்தி திருத்தப்பட்டது @ 23:19 / 07.06.2013] |