காயல்பட்டினம் நெய்னார் தெருவில், பெரிய குத்பா பள்ளி – மன்பஉல் பரக்காத் சங்கத்திற்கிடையிலுள்ள பகுதியில், இன்றிரவு 10.30 மணியளவில், அத்துமீறி ஓடிய – TN 22 K 1161 என்ற எண்ணுடைய சான்ட்ரோ கார் மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
அந்த வாகனத்தை வயது குறைந்த சிறுவன் இயக்கியதாகவும், வாகனத்தின் பின்புறம் இருவர் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பெரிய குத்பா பள்ளி அருகிலுள்ள சிமெண்ட் வேகத்தடையைக் கவனியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தபோது, பெரும் ஒலியுடன் வேகத்தடை மீது கார் ஏறி இறங்கியதாகவும், எதிரே இரண்டு இரு சக்கர வாகனங்கள் வந்ததால், வழி விடுவதற்காக வேகமாக வந்த காரை இடதுபுறமாகத் திருப்பியபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் போடப்பட்டிருந்த சென்ட்ரிங் மரங்களின் மீதேறி, எதிரேயிருந்த சிமெண்ட் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் அதிர்வுற்ற அந்த மின் கம்பத்தின் அடிப்பாகம் சிதைந்து சேதமுற்றது.
மின்கம்பத்தின் அருகிலுள்ள வீட்டின் முன்பகுதி படியில் சில பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில் வாகனம் மின் கம்பத்தின் மீது மோதியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த சில நிமிடங்களில், அங்கிருந்த பொதுமக்கள் காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கும், ஆறுமுகநேரி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினர். சிறிது நேரத்தில், அங்கு வந்த மின்வாரிய அலுவலர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளதா என்பதைப் பார்த்தறிந்த பின்னர், சில நிமிடங்களில் மின்தடை நீக்கப்பட்டது.
இந்நிகழ்கு காரணமாக, நெய்னார் தெருவே பரபரப்புடன் காணப்படுகிறது.
தகவல்:
L.T.இப்றாஹீம்
கள உதவி:
M.I.ஜமீல் |