தேசிய மக்கள் தொகை பதிவேடு (NATIONAL POPULATION REGISTER) தயாரிக்க காயல்பட்டினத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில்
2010ம் ஆண்டு - மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன் நடைபெற்ற, ஒரு குடும்பத்தில் உள்ள சாதாரணமாக வசிக்கும் (Usual Residents) அனைத்து நபர்களின் விபரங்கள் சேகரிப்பின் போது, பெயர் சமர்ப்பித்தவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளலாம். முகாமில் கலந்துக்கொள்ள வருபவர்கள் - அப்போது வழங்கப்பட்ட ஒப்புதல் சீட்டு கொண்டு வரவேண்டும்.
அவ்வேளையில் பெயரினை பதிவு செய்யாதவர்கள் புதிதாக படிவத்தை (NPR FORM) முகாமின் போது நிரப்பிக்கொடுத்தால், அடுத்து நடைபெறும் முகாமின் போது அவர்கள் பங்கேற்கலாம் என இம்முகாம்களின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு தேவையான கீழ்க்காணும் 15 அடிப்படை தகவல்கள் 2010 ம் ஆண்டே NPR படிவம் மூலம் சேகரிக்கப்பட்டுவிட்டது.
(1) பெயர் (2) குடும்பத் தலைவருடனான உறவு (3) தந்தை பெயர் (4) தாயார் பெயர் (5) கணவன்/மனைவி பெயர் (6) பாலினம்
(7) பிறந்த தேதி (8) திருமண நிலை (9) பிறந்த இடம் (10) இந்தியரா, வெளிநாட்டவரா (11) தற்போதைய முகவரி (12) தற்போதைய முகவரியில் இருக்கும் காலம் (13) நிரந்தர முகவரி (14) தொழில் (15) கல்வி தகுதி
NPR படிவத்தில் இருந்த அத்தகவல்கள் தற்போது ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக புகைப்படமும், 10 விரல்களின் கைரேகையும், இரு விழித்திரை (Iris) ஸ்கேன் மட்டும் எடுக்கப்படும்.
இது தவிர - ஒவ்வொரு நபரின் குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அட்டை எண் போன்ற விபரங்கள் கூடுதலாக தற்போது நடைபெறவுள்ள முகாம்களில் பெறப்படும் (KYR + Form).
சேகரிக்கப்பட்ட தகவல்கள் - ஆதார் (Aadhaar) அட்டை வழங்கும் மத்திய திட்டக்குழுவின் கீழ் செயல்படும் அமைப்பான UNIQUE IDENTIFICATION AUTHORITY OF INDIA (UIDAI) இன் துணையுடன் சரி பார்க்கப்படும். அதன் முடிவில் - ஒவ்வொருவருக்கும் - ஆதார் எண் வழங்கப்படும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) பதிவேட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் - தங்கள் பெயரை பதிவு செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவேட்டில் பெயர் பதிவு செய்வோர் - தங்கள் முகவரியில் கடந்த ஆறு மாதங்கள் இருந்திருக்கவேண்டும் அல்லது அடுத்த ஆறு மாதம் இருக்க திட்டமிட்டிருக்கவேண்டும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு - மத்திய உள்துறை அமைச்சகத்தின் மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் (Registrar General and Census Commissioner of India) மூலம் தயாரிக்கப்படுகிறது. NPR திட்டம் மூலம் Resident Identity Card என்ற 64KB சிப் கொண்ட ஸ்மார்ட் அட்டையும் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் வாழும் ஒவ்வொரும் தங்கள் பெயரை - தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சேர்த்துக்கொள்வது கட்டாய கடமையாகும். இதற்காக இந்திய குடியுரிமை சட்டம், 1955 - 2003ம் ஆண்டு திருத்தப்பட்டது.
ஆதார் அட்டையினை பொருத்தவரை -விருப்பப்பட்டோர் மட்டும் - விண்ணப்பித்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் பல சலுகைகள் ஆதார் எண் அடிப்படையிலேயே வருங்காலங்களில் கொடுக்கப்படும் என்ற திட்ட அறிவிப்புகள், ஆதார் அட்டையை பெறுவது கட்டாயம் என்ற நிலையை மறைமுகமாக உருவாக்கியுள்ளது.
ஆதார் அட்டையினை வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெறலாம்.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:45/10.06.2013 |