காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆவணங்கள் காப்பறையை உடைத்து ஆவணங்களை தீவைத்து சேதப்படுத்தியதாக 5 பேரை ஆறுமுகனேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தீவுத்தெருவில், தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இம்மாதம் 09ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், இப்பள்ளி கட்டிடத்தில் உள்ள ஆவண காப்பறையை உடைத்து புகுந்த நபர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவலறிந்த தலைமையாசிரியை ஏசுவடியாள் பொன்னம்மாள், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் டி.பார்த்திபன், உதவி ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிகழ்வு குறித்து ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் கூறியதாவது:-
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.முஹம்மது ஃபாரூக். இவரது பெரியப்பா ஷாஹுல் ஹமீத் - யூனியன் பள்ளிக்குக் கட்டிடங்கள் வழங்கி, அதில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. ஃபாரூக் யூனியன் துவக்கப்பள்ளியின் மாடியில் ஃபாத்திமா நர்சரி பள்ளி என்ற பெயரில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார்.
யூனியன் பள்ளி வாடகை பெறுவதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் மாடியில் இயங்கும் நர்சரி பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஃபாரூக் ஆட்களை வைத்து பள்ளி ஆவணங்களை தீயிட்டு எரித்தது விசாரணையில் தெரியவந்தது. தீயில் பள்ளிக்கு சொந்தமான 25 பாய்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பதிவேடுகள் கணித உபகரணங்கள் எரிந்து சேதமாயின. சேத மதிப்பு ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.
இவ்வாறு, காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காயல்பட்டினம் தீவுத்தெரு ஏ.கே.செய்யது அஹ்மத் மகன் எஸ்.ஏ.முஹம்மத் ஃபாரூக் (67) மற்றும் பேயன்விளை மேலத்தெரு வள்ளல் மகராஜன் மகன் பாலசுப்பிரமணியன் (24), கீழலட்சுமிபுரம் பலவேசம் மகன் மலைமேகம்(47), தேங்காய் பண்டகசாலை தெரு சுடலைமாடன் மகன் அந்தோணிராஜ் (29) மற்றும் கீழலட்சுமிபுரம் அந்தோணிசாமி மகன் ஸ்ரீதர் (38) ஆகிய 5 பேரை ஆய்வாளர் பார்த்திபன் திங்கட்கிழமை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தார். அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 06:14 / 11.06.2013] |