மாவட்ட ஆட்சியரின் அறிக்கைப்படி நெய்னார் தெரு சாலைப்பணியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுக்குக் காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் - பொது நிதி (5 பணிகள் - மதிப்பு ரூபாய் 43 லட்சம்), IUDM திட்ட நிதி (10 பணிகள் - மதிப்பு ரூபாய் 97 லட்சம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திட்ட நிதி (3 பணிகள் - மதிப்பு ரூபாய் 21 லட்சம்) ஆகியவை மூலம் - 161 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 18 பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த அக்டோபர் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் IUDM திட்டத்திற்கு கீழான 3 பணிகள், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளாகும்.
15 சாலைப் பணிகளில், 3 சாலைப்பணிகள் (அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு மற்றும் நெய்னார் தெரு) - சாலையை முற்கூட்டியே தோண்டி, நிறைவேற்றப்படவேண்டியவை. இந்த மூன்று சாலைப்பணிகளை மேலோட்டமாக பார்க்கும்போதே, சாலைகள் முறைப்படி தோண்டப்படவில்லை என தெரிந்தது. ஆகவே - இது குறித்து விசாரிக்கும்படி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - மாவட்ட ஆட்சியர் அமைத்த ஆய்வு குழு, மூன்று சாலைகளையும் பார்வையிட்டது. மூன்று சாலைகளில் - நெய்னார் தெரு சாலைப்பணிகள் மட்டும் ஓரளவு நடைப்பெற்றிருந்ததால் - அச்சாலையை மட்டும், ஆய்வு குழு பரிசோதனை செய்தது. அந்த குழு தயாரித்த ஆய்வறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பெறப்பட்ட ஆய்வறிக்கையை, மாவட்ட ஆட்சியர் - சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாகத்துறையின் ஆணையருக்கு அனுப்பிவைத்தார்.
12 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நெய்னார் தெரு சாலை பணியில், நகராட்சியின் பதிவேட்டில் - ரூபாய் 8,87,535 மதிப்பிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக (நகராட்சியின்) M புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுவரை நிறைவு செய்யப்பட்ட இப்பணிகளின் மதிப்பு ரூபாய் 6,75,214 ரூபாய் மட்டும் என்றும் - ஆகவே ரூபாய் 2,12,321 அளவிற்கு முறைக்கேடு நடந்திருப்பதாக தெரிகிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது.
மாவட்ட ஆட்சியர் அனுப்பிய ஆய்வறிக்கையின் மீது நகராட்சி நிர்வாகத்துறை ஆணையம் எடுத்த நடவடிக்கை குறித்த முழு விபரம் வெளியாகவில்லை. இருப்பினும் - மே 31, 2013 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில், சாலைப்பணிகள் குறித்து வினா எழுப்பப்பட்டபோது பதில் கூறிய நகராட்சி ஓவர்சியர் - சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்கும்படி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
IUDM திட்டத்தின் கீழான - நெய்னார் தெரு, ஆசாத் தெரு உட்பட 10 பணிகளின் டெண்டரும், தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கே வழங்கப்பட்டது. அது தவிர சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் அப்பாபள்ளி தெரு சாலைப்பணிக்கான டெண்டரும் தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கே வழங்கப்பட்டுள்ளது.
நெய்னார் தெரு சாலைப்பணிகள் குறித்த விசாரணை நடைபெற்று வந்ததால், அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு சாலைப்பணிகளை பெற்றிருந்த அதே ஒப்பந்ததாரர் - அந்த இரு சாலைகளின் பணியையும் நிறுத்தி வைத்திருந்தார்.
பல மாதங்களுக்கு பிறகு அச்சாலைப் பணிகள் மீண்டும் தற்போது துவங்கி உள்ளன. இது குறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி பொறியாளர் சிவகுமாரிடம் வினவிய போது - நெய்னார் தெரு சாலை குறித்த நகராட்சி நிர்வாகத்துறையின் முடிவு எழுத்துப்பூர்வமாக பெறப்படவில்லை என்றும், அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு மற்றும் மஹ்லரா காலனி சாலைகள் - ஆவணங்களில் உள்ள கணக்குப்படி போடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், காயல்பட்டினம் வந்திருந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னையின் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் - மீண்டும் துவக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை - ஜூன் 10 (திங்கட்கிழமை) அன்று - பார்வையிட்டார். இவ்வமைப்பின் காயல்பட்டினம் கிளை - பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ, செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் அவ்வேளையில்
உடனிருந்தனர். நகராட்சியின் சாலைப்பணிகளின் தரம் குறித்து இதுவரை காயல்பட்டினம் கிளை மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அப்போது விளக்கம் வழங்கப்பட்டது.
நெய்னார் தெரு சாலைப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை எடுத்துள்ள முடிவு விபரத்தை ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை கோரவுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கைப்படி நெய்னார் தெரு சாலைப்பணியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுக்குக் காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்துகிறது. இது தவிர - பிரச்சனைக்குரிய ஒப்பந்தாரர் தலவாணிமுத்து மூலம் தற்போது நடைபெறும்/சமீபத்தில் நடைபெற்று முடிந்த அனைத்து பணிகளையும் - முறையான குழுக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் - இது குறித்து பொது நல வழக்கு தொடரவும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |