14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலைக்கு செல்வதை எதிர்த்தும், கல்வி கற்காத குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 12ஆம் நாளன்று, நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி இன்று (12.6.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முத்து அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு பயின்று வரும் குழந்தைத் தொழிலாளர் மாணவ மாணவியர் 7 பேருக்கு தலா ரூ.6000/- வீதம் உதவித்தொகையும், 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 5 குழந்தை தொழிலாளர் மாணவ மாணவியருக்கு அகராதி மற்றும் கால்குலேட்டர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் ஜா.பெல்லா, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். |