சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களால், வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், “விஸ்டம் பப்ளிக் ஸ்கூல்” என்ற பெயரில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட கட்டிடப் பணிகள் நிறைவுற்றதையடுத்து, புதிய கட்டிட துவக்க விழா, இம்மாதம் 09ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, புதிய கல்வியாண்டின் முதல் நாள் வகுப்புகள், இம்மாதம் 11ஆம் தேதியன்று காலை 09.00 மணிக்குத் துவங்கின.
புதிய பள்ளி - புதிய வாகனம் என்பதால், மாணவ-மாணவியரின் பெற்றோர், வாகன ஓட்டிகளுக்கு தமதில்லங்களை அடையாளங்காட்டுவதற்காக சாலையில் காத்திருந்தனர்.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மாணவ-மாணவியரை பள்ளி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இப்பள்ளியில், வகுப்பறையில் வருகைப் பதிவேடு முறை கிடையாது. நுழைவாயிலிலேயே ஸ்மார்ட் கார்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து மாணவ-மாணவியருக்கும் பள்ளியில் சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரவர் படங்கள் மற்றும் விபரக் குறிப்புகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டையை கருவியின் மீது காண்பித்து, ஏற்றுக்கொண்டதற்கான ஒலி வந்ததும் வகுப்பிற்குள் செல்ல வேண்டும்.
இந்த முறை மூலம், மாணவர்கள் பள்ளிக்குள் வந்த நேரம், பள்ளியை விட்டும் வெளிச்செல்லும் நேரம் ஆகியன ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகிறது. இத்தகவல், மாணவ-மாணவியரின் பெற்றோருடைய கைபேசிக்கும் குறுஞ்செய்தித் தகவலாக தானியங்கி முறையில் அனுப்பப்படுகிறது.
முதல் நாளென்பதால், ஸ்மார்ட் கார்டை கருவியில் காண்பிப்பதற்கு மாணவ-மாணவியருக்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் துணை நின்றனர்.
பாட இடைவேளையின்போது, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான விளையாட்டுப் பொருட்களை மாணவ-மாணவியர் விளையாடி மகிழ்ந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், இப்பள்ளியில் 01 முதல் 05ஆம் வகுப்பு வரை மட்டும் துவக்கி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |