காயல்பட்டினம் அப்பா பள்ளிவாசலையடுத்து அமைந்துள்ளது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி.
மூன்றாண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ஆலிமா கல்வி, மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி, திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.காம்., அஃப்ஸலுல் உலமா, பி.சி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகள், சிறுமியருக்கான வாராந்திர தீனிய்யாத் வகுப்பு, இல்லத்தரசியருக்கான ஓராண்டு கல்வித் திட்டம், தையல் பயிற்சி வகுப்பு, திருமண தகவல் திட்டம், ஃபத்வா - மார்க்கத் தீர்ப்பாயக் குழு, சொற்பயிற்சி மன்றம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி நடைபெற்று வருகிறது இக்கல்லூரி.
இக்கல்லூரியின் 24ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, 29.05.2013 மற்றும் 30.05.2013 தேதிகளில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
29.05.2012 புதன்கிழமையன்று காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தீனிய்யாத் பிரிவு சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
30.05.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, பெண்கள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டம் பெறும் மாணவியர் சார்பில், திருமங்கலம் நகரைச் சார்ந்த மாணவி எஸ்.ஸாஜிதா பானு, “மறுமைக்காக தயாராவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கோயமுத்தூரைச் சேர்ந்த மாணவி என்.ஷர்மிளா பானு அரபியில் உரையாற்ற, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி பி.ஐ.ஃபாத்திமா அதற்கு தமிழாக்கமளித்தார். பின்னர், தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரை நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள் ஆண்கள் பகுதியில் நடைபெற்றது. எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், சென்னை தாருல் ஹுதா வெளியீட்டக நிறுவனர் மவ்லவீ ஷேக் உமர் ஷரீஃப் முஃப்தீ காஸிமீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 25 மாணவியருக்கு, “ஆலிமா ஸித்தீக்கிய்யா” பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் எட்டாண்டு பாடத்திட்டத்தின் கீழ் தீனிய்யாத் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற 32 மாணவியருக்கும், ஓராண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 6 மாணவியருக்கு “முபல்லிகா” சான்றிதழும் வழங்கப்பட்டன.
பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆண்கள் பகுதியிலிருந்து வாசிக்க, பெண்கள் பகுதியில், கல்லூரியின் ரக்கீபாக்கள் (கண்காணிப்பாளர்கள்) அவர்களுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர், கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, பட்டம் பெற்ற மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
நிறைவாக, கல்லூரியின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
பெண்கள் பகுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் கல்லூரி மாணவியர் விடுதி உள் வளாகத்திலும், ஆண்கள் நிகழ்ச்சி, கல்லூரி கேளரங்கத்தின் கீழ்ப்பகுதி வெளிப்புறத்திலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், உள்ளூர் - வெளியூர்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில், கடந்த (2012) ஆண்டு நடைபெற்ற – கல்லூரியின் 23ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
படங்கள்:
S.K.ஷமீமுல் இஸ்லாம்
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 10:00 pm /14.6.2013 |