காயல்பட்டினம் 15ஆவது வார்டுக்குட்பட்ட சீதக்காதி நகரில், இரத்தினபுரியையொட்டி - குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள முட்புதரில் இன்று நண்பகல் 11.30 மணியளவில் தீ பற்றி எரிந்தது.
காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், அப்பகுதியில் சேகரித்த குப்பைகளை அங்கேயே போட்டு எரித்துவிட்டுச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தீ கொளுந்துவிட்டு எரியத் துவங்கியதும், முதற்கட்டமாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், அருகிலிருந்த வீடு ஒன்றிலிருந்தும், இரத்தினபுரி கோயிலிலிருந்தும் நெகிழி குழாய் மூலம் தண்ணீரைப் பாய்ச்சி, ஓரளவுக்கு தீயை அணைத்தனர்.
சில மணித்துளிகளில் அவ்விடம் வந்த திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு, முட்புதர் முழுக்க தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
நகரில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் இந்த விரைவான செயல்பாடு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது அவ்விடத்திற்கு வந்த காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார், நகராட்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், இதுகுறித்து துப்புரவுப் பணியாளர்களிடம் விசாரிப்பதாகக் கூறிச் சென்றனர்.
கள உதவி:
‘கோமான்’ மீரான் |