இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சி நடத்தப்படும் என - உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 06.06.2013 வியாழக்கிழமை இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு ஹாஜி எஸ்.எச்.ஷேகு அப்துல் காதிர் (சின்ன லெப்பை), ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை தாங்கிய -. இக்ராஃ துணைத் தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான டாக்டர் ஏ.முஹம்மது இத்ரீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
செயலர் உரை:
அடுத்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது பேசினார்.
கல்வி உதவித்தொகை குறித்து பிரசுரம்:
துவக்கமாக, உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன் - இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடப்பு கல்வியாண்டில் வழங்கப்படவுள்ள கல்வி உதவித் தொகைக்காக இக்ராஃவால் வெளியிடப்பட்ட பிரசுரத்தை அனைவருக்கும் அவர் காண்பித்து, அதுகுறித்து விளக்கினார்.
வழமை போல இவ்வருடமும் இக்ராஃவின் கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பு பிரசுரம் வெளியிடப்பட்டது என்றும் இதனை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்டதுடன் அனைத்து பள்ளிவாசல்களுக்கும், அமைப்புகளுக்கும் அறிவிப்புப் பலகையில் வைத்திட அனுப்பப்பட்டுள்ளது என்றும்,
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தோர் விபரம்:
நடப்பு கல்வியாண்டில் இக்ராஃ மூலம் புதிதாக கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 40 மாணவியரும், 24 மாணவர்களும் என மொத்தம் 64 மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இதுவரை கல்வி உதவித்தொகை வகைக்காக 5 அனுசரணைகள் மட்டுமே புதிதாகப் பெறப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இன்னும் 59 அனுசரணைகள் தேவைப்படுவதாகவும், அதற்கான முயற்சியை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதர உதவித் தொகைகளைப் பெற்றிட வழிகாட்டல்:
மேலும் இக்ராஃ தவிர கல்வி உதவித்தொகைகள் வழங்கி வரும் இதர முன்னணி தனியார் அமைப்புகள் பலவற்றின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்து நமது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்ராஃ அலுவலகத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்கள் விசாரணை:
பின்னர், நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாணவ-மாணவியரை, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க,
(1) ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
(2) ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப்
(3) ஹாஜி ஏ.ஆர்.தாஹா
(4) ஜனாப் கே.எம்.டி.சுலைமான்
(5) ஜனாப் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது
(6) ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மம்னாகார்)
ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய தனிக்குழு:
இக்குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்வதற்கு,
(1) ஹாஜி டாக்டர் ஏ. முஹம்மத் இத்ரீஸ்
(2) ஹாஜி எஸ்.எச்.ஷேகு அப்துல் காதிர் (சின்ன லெப்பை)
(3) ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்
(4) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
ஆகியோர் நேர்காணல் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013 & கத்தர் வினாடி-வினா:
அடுத்து, நடப்பாண்டு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியை நடத்துவதற்கான இடம், நாள், நேரம், நிகழ்முறை குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 2006, 2007, 2008, ஆகிய வருடங்களில் ஜலாலியா திருமண அரங்கத்திலும், 2009இல் எல்.கே.மேனிலைப்பள்ளி மற்றும் ரெட் ஸ்டார் சங்க மைதானத்திலும், 2010இல் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மற்றும் காயல் ஸ்போர்ட்டிங் கிளப் (K.S.C.) மைதானத்திலும், ,2011இல் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்க (U.S.C.) மைதானத்திலும், 2012இல் காயல் ஸ்போர்ட்டிங் கிளப் (K.S.C.) மைதானத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் இந்த விழாவை நடத்திட அனுமதி கேட்டுப் பார்க்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
நிறைவில், அவை குறித்து பின்வருமாறு முடிவு செய்யப்பட்டது:-
நிகழ்விடம்:
ரெட் ஸ்டார் சங்கம், காயல்பட்டினம்
நாள்
29.06.2013 சனிக்கிழமை
நிகழ்முறை:
(1) நிகழ்வு நாளன்று காலையில் மாநிலத்தின் முதன்மாணவர்களுடன், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.
(2) அன்று மாலையில், பரிசளிப்பு விழா நடைபெறும்.
(3) மறுநாள் - 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் வினாடி வினா நிகழ்ச்சி, இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும்.
ஏற்பாட்டுக் குழு:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” கலந்துரையாடல் நிகழ்முறை, பரிசளிப்பு விழா நிகழ்முறை, பரிசளிப்பு விழாவிற்கான சிறப்பு விருந்தினரை முடிவு செய்து வரவழைத்தல், பரிசு வகைகளை இறுதி செய்து, அவற்றுக்கான அனுசரணையைப் பெறல் உள்ளிட்டவற்றை,
(1) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
(2) ஹாஜி எஸ்.ஐ.புகாரீ
(3) ஏ.தர்வேஷ் முஹம்மது
(4) எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
(5) ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(6) எம்.எம்.ஷாஹுல் ஹமீது
ஆகியோருடன், இக்ராஃ நிர்வாகிகளும் இணைந்து செய்திட இக்கூட்டத்தில் பொறுப்பளிக்கப்பட்டது.
ஊக்கப் பரிசுகள்:
பின்னர், 2012-2013 கல்வியாண்டில், 12ஆம் வகுப்பில்
1200க்கு 1000 மதிப்பெண்களும், அதற்கு மேலும் பெற்ற - நகரின் 52 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 200 தொகையும், பதக்கமும், பாராட்டு சான்றிதழும்,
1200க்கு 1100 மதிப்பெண்களும், அதற்கு மேலும் பெற்ற - நகரின் 18 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 300 தொகையும், பதக்கமும், பாராட்டு சான்றிதழும்,
அதே கல்வியாண்டில், 10ஆம், 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற (Subject Centum) மாணவ-மாணவியருக்கு, தலா ரூபாய் 500 தொகையும், பாராட்டு சான்றிதழும், வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட பரிசு வகைகள் (Cash prize) அனைத்திற்கும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே அனுசரணையளிக்க பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இக்ராஃவுக்கு சொந்த இடம்:
அடுத்து இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்குவதற்காக இதுவரை பார்க்கப்பட்ட இடங்கள் குறித்தும், அப்பா பள்ளி ஜமாஅத் மற்றும் செய்ஹு ஹுஸைன் பள்ளி ஜமாஅத்துக்கு உட்பட்ட இடங்களில் சாத்தியக்கூறுகள் குறித்தும் அந்தந்த ஜமாஅத்துகளுடன் தொடர்பு கொண்ட விபரங்கள் அவர்கள் தரப்பு பதில்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.நடைமுறை சாத்தியங்கள்,பிற்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள சட்ட சிக்கல்கள் குறித்த நீண்ட ஆலோசனைகளுக்குப்பிறகு, ''விசாலமான இடமாக அமையப்பெறாமல் சிறிய அளவிலான இடமாக அமைந்தாலும் பரவாயில்லை. அது இக்ராஃவுக்கென்று சொந்த இடமாகவே வாங்கி அதில் கட்டிடம் கட்டுவதே அனைத்துக்காலகட்டங்களுக்கும் சிறந்ததாக இருக்கும்'' என்று முடிவு செய்யப்பட்டது. இக்ராஃவுக்கு பொருத்தமான இடம் கண்டறியப்பட்டு, அது குறித்த தகவலறிக்கையை இக்ராஃ கட்டிடக்குழு வழங்கிய பின் இது குறித்து இறுதி முடிவு மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
பின்னர், கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய விசாரணைக் குழு அமைத்தும், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழுவை நியமித்தும், இன்னும் சிலவற்றுக்காகவும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்ட நிறைவு:
இவ்வாறாக, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆ - பிரார்த்தனை செய்ய, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களாக - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மது , தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மது, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் (சீனா), காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம் |