காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையையொட்டியுள்ள காயிதேமில்லத் நகரில், கே.எம்.டி. மருத்துவமனைக்குத் தென்புறமாக அமைந்துள்ளது பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல். புதிதாகக் கட்டப்பட்டு, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் தேதியன்று திறப்பு விழா கண்டது. அன்று முதல் இப்பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) இப்பள்ளியில் ஜும்ஆ தொழுகை முதன்முறையாக நடத்தப்பட்டது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு தமிழுரையும், 01.15 மணிக்கு ஜும்ஆ குத்பாவும், அதனைத் தொடர்ந்து தொழுகையும் நடத்தப்பட்டது.
தமிழுரை மற்றும் குத்பா உரையை மவ்லவீ ஹாஃபிழ் காரீ எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ நடத்தினார்.
ஜும்ஆ பாங்கை, அரபி முஹம்மத் முஹ்யித்தீன் ஒலித்தார். ஜும்ஆ தொழுகையை, இப்பள்ளியின் இமாம் ஹாஃபிழ் ஷெய்கு அலி மவ்லானா ஸாஹிப் வழிநடத்தினார்.
இத்தொழுகையில், காயிதேமில்லத் நகர் பகுதி மக்களும், பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் என சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். துவக்க ஜும்ஆ என்பதால், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைவரும் வாசனைத் திரவியத்துடன் வரவேற்கப்பட்டனர்.
ஜும்ஆ தொழுகைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், துணைச் செயலாளர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்திருந்தனர். |