காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தால், பள்ளி செல்லும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் தீனிய்யாத் (மார்க்க அடிப்படைக்) கல்வி நிறுவனம் “மக்தபத்துர் ராஸிய்யா”.
இங்கு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் திருமறை குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனம், பேச்சுப்போட்டி, துஆ - பிரார்த்தனை மனனப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டின் போட்டிகள் இம்மாதம் 13ஆம் தேதி (இன்று) முதல் 16ஆம் தேதி வரை, ஜாவியா வளாகத்தில் நடைபெறுகிறது.
இன்று மாலை 05.00 மணிக்குத் துவங்கிய அமர்வில், ஜாவியா அரபிக் கல்லூரியின் ஜும்றா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மக்தபத்துர் ராஸிய்யா தீனிய்யாத் பிரிவின் முதல் நிலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி - “தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தீனிய்யாத் இரண்டாம் நிலை மாணவர்கள் பங்கேற்ற - திருமறை குர்ஆனின் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி நடைபெற்றது.
அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முன்னதாக, தீனிய்யாத் வகுப்புகள் நடைபெற்றபோது, நுழைவுப் போட்டி நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - முறைப்படியான இப்போட்டிகளில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், 8 ஆண்டுகள் பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் கல்வியை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கும் விழா, இம்மாதம் 23ஆம் தேதியன்று ஜாவியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. |