மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து கண் மருத்துவ இலவச முகாமை, இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தவுள்ளன.
ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில், இம்முகாமை நடத்தும் அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி முகாமைத் துவக்கி வைக்கிறார்.
இம்முகாமில், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கண் மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் வழங்கவுள்ளனர்.
இம்முகாமில், கண்புரை, சர்க்கரை நோய் காரணமாக கண்ணில் ஏற்படும் பாதிப்புகள், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என்றும், முகாமில் கலந்துகொள்வோர் - தமக்கு இரத்த உயர் அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் அல்லது உடலில் வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருப்பின், கண் அறுவை சிகிச்சைக்குத் தகுதியுள்ளவர் என்பதற்கான மருத்துவ சான்றிதழ் மற்றும் மருந்து - மாத்திரைகளுடன் முகாமுக்கு வருகை தருமாறும், முகாம் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், காயல் இரத்த தானக் கழக அமைப்பாளர் ஹாஜி ஓ.எஸ்.ஃபாரூக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
முகாம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள,
காயல் இரத்த தானக் கழகத்தின் நிறுவன தலைவர் ஹாஜி எல்.எஸ்.அன்வர் (தொடர்பு எண்கள்: 280030, 94436 57298), ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் எல்.எம்.இ.கைலானீ (தொடர்பு எண்கள்: 285200, 94866 55786) ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:45 pm / 13.06.2013] |