சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், உண்டியல் நன்கொடை சேகரிப்பு நிதியாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், இம்மாதம் 22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கும், 29ஆம் தேதியன்று குடும்ப சங்கம நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகவும் அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
கருணையுள்ள அல்லாஹ்வின் பேரருளால், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 07ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசகர் உரை:
உறுப்பினர் ஹாஜி எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நடப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து மன்ற நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட அழைப்புக் குறுஞ்செய்திகளுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் பதிலளித்துள்ளதைப் பாராட்டிய அவர், விரைவாக பதிலளித்ததால், கூட்ட ஏற்பாடுகளை சிரமமின்றி செய்ய அது துணையாக அமைந்ததாகவும் கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எல்.எஸ்.மொகுதூம் முஹம்மத் சிற்றுரையாற்றினார்.
சிங்கப்பூருக்கு தான் வந்தது, வேலைவாய்ப்பைப் பெற்றது குறித்த அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட அவர், போட்டிகள் நிறைந்த நடப்புலகில் தகுதியான வேலைவாய்ப்புகளைப் பெறுவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல என்றும், எனவே, சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடி வரும் காயலர்கள், தமது ஆளுமைக் குறிப்பை (பயோடேட்டா) அழகுற ஆயத்தம் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அடுத்து, மன்றத்தில் புதிதாக உறுப்பினரான,
(1) ஷேக் ஹுமாயூன்
(2) எஸ்.எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர்
(3) அபூபக்கர் ஸித்தீக்
(4) மஹ்மூத் மானாத்தம்பி
(5) ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல்
ஆகிய 5 உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து, மன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், விரைவில் 100 உறுப்பினர்கள் என்ற இலக்கை - அனைத்துறுப்பினர்களின் மனமார்ந்த ஒத்துழைப்புடன் இன்ஷாஅல்லாஹ் எட்டவுள்ளதாகவும், புதிய உறுப்பினர்கள் உட்பட அனைத்துறுப்பினர்களும் தகுதியான வேலைவாய்ப்புகளில் உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மீளாய்வு:
அடுத்து, மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசித்து, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மன்றத்திற்காக வங்கியில் வைப்புக் கணக்கு (current account) துவங்குவது குறித்து கருத்து தெரிவித்த மன்ற ஆலோசகர், மேற்படி புதிய வங்கிக் கணக்கு துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையையும் மன்றச் செயலாளர் வாசிக்க, விசாரணைகளுக்குப் பின் கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
வேலைவாய்ப்பு திறன் வளர்ப்புக் கருத்தரங்கு:
மன்றத்தின் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பு திறன் வளர்ப்புக் கருத்தரங்கத்தை நடத்திட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, அதற்கான ஏற்பாடுகளை - அதற்குரிய குழு கவனிக்குமென்றும், இந்நிகழ்விற்கு அழைப்பு விடுத்து மன்றத்தால் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு விடையளிக்கையில், தமது பணி விபரங்களை மன்ற உறுப்பினர்கள் மறவாமல் குறிப்பிடுமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்காக மன்றத்தால் நடத்தப்படும் குடும்ப சங்கம நிகழ்ச்சியின் அடுத்த நிகழ்வு இம்மாதம் 29ஆம் தேதியன்று Punggol Waterway Parkஇல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்விடம் - குடும்ப சங்கம நிகழ்ச்சிக்குப் பொருத்தமானதுதானா என்பதை நேரில் ஆய்ந்தறிந்து வருமாறு மன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
விண்ணப்பங்கள் விசாரணை:
பல்வேறு உதவிகள் கோரி, காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களிடமிருந்து பெறப்பட்ட - இதுநாள் வரையிலான விண்ணப்பங்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணையறிக்கையை, மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
இவ்வறிக்கையின் அடிப்படையிலான இரண்டாம் கட்ட விசாரணையறிக்கை அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கு முன்பாக (இன்ஷாஅல்லாஹ்) பெறப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி - 2013:
புனித ரமழான் மாதம் நெருங்குவதையொட்டி, மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுவதவி வழங்கும் திட்டத்தின் கீழ் - அடுத்தகட்ட வினியோகத்திற்கு ஆயத்தமாக வேண்டும் என்று கூறிய மன்ற ஆலோசகர், இத்திட்டம் குறித்து - புதிய உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
பின்னர், ரமழான் மாதத்திற்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி வினியோகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக,
(1) ஜெ.எஸ்.தவ்ஹீத்
(2) எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான்
(3) எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத்
ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது.
முதியோர் நலத்திட்டம்:
மன்றத்தின் புதிய திட்டமான முதியோர் நலத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த இயலாநிலையிலுள்ள முதியோரின் நலனுக்கான செலவினங்களை, மன்றத்தின் ஜகாத் நிதியிலிருந்து செய்துகொள்வதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, இத்திட்டத்தை எளிதான முறையில் செய்வதற்காக, மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை மன்றத்தின் மூலம் வழங்கிடுமாறு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அணிந்த நல்லாடை சேகரிப்பு:
தேவையுடைய காயலர்களுக்கு வழங்குவதற்காக, மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து - அணிந்த நல்லாடைகளை சேகரிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அணிந்த நல்லாடைகளை வழங்க விரும்புவோர்,
a. Block 129, Bedok North Street 2
b. KWAS Office, Jalan Sultan
ஆகிய இரண்டு சேகரிப்பிடங்களில் வழங்கியொத்துழைக்குமாறு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
புதிய மகவு:
இறையருளால், தனக்குப் புதிதாக பெண் மகவு பிறந்த நற்செய்தியை, மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர் அபுல் காஸிம் கூட்டத்தில் தெரிவித்து, தாய் - சேய் நலனுக்காக இறையோனிடம் பிரார்த்திக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார். உறுப்பினர்கள் அதற்காக வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
அடுத்த கூட்டம்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை, வரும் ஜூலை மாதம் 05ஆம் தேதியன்று நடத்திடவும், அக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனிப்பதற்காக, மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர் முஹம்மத் உமர் ரப்பானீ வசம் பொறுப்பளித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
மன்றத்தின் - நலிந்தோர் நலத்திட்டத்திற்காக சேகரிக்கப்படும் உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், சேகரிக்கப்பட்ட அனைத்து உண்டியல்களும் கூட்டத்தின்போது உறுப்பினர்களால் திறந்து, எண்ணப்பட்டது.
இதில், ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் தொகை உண்டியல் சேகரிப்பு நிதியாகப் பெறப்பட்டு, மன்றத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
வெற்றுண்டியல்களை அந்தந்த உறுப்பினர்களிடம் வழங்கிட, மன்ற உறுப்பினர்களான மஹ்மூத் மானாத்தம்பி, எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத், துணைக்குழு உறுப்பினர் முஹம்மத் உமர் ரப்பானீ ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்கள் இல்லா நிலையில், பி.எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு – துணைக்குழு உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், மன்ற உறுப்பினர் அப்துர்ரஹீமைப் பங்குதாரராகக் கொண்ட - அன்னலக்ஷ்மி ரெஸ்டாரென்ட் அன்ட் கேட்டரிங் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திலிருந்து தருவாக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் அனைவருக்கும் இரவுணவாக வழங்கியுபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம் குறித்து, அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:45 / 12.06.2013] |