காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 27ஆம் நாள் (ஜூன் 07ஆம் தேதி - நேற்று) நிகழ்ச்சி, காலையில் துவங்கியது. நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ வழங்கினார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலகப் பயணம் தொடர்பான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி அந்த உரை அமைந்திருந்தது.
நேற்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில், இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபை உருவாக்கியோர், வாக்கிபூன்கள் மீதும் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், அன்னவர்களின் புகழ்மாலை – மர்ழிய்யாவும் ஓதப்பட்டது. ஏ.முஹம்மத் ஜியாத் துஆவுடன் மவ்லித் மஜ்லிஸ் நிறைவுற்றது.
இன்று, ரஜப் 28ஆம் நாள் (ஜூன் 08) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை – கொழும்பிலுள்ள அல்ஜாமிஉல் அழ்ஃபர் சம்மாங்கோட் பள்ளியின் இமாமும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வழங்குகிறார்.
அவரைத் தொடர்ந்து, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையை, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் ஆற்றப்படும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ரஜப் 26ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |