மின் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக, காயல்பட்டினம் உட்பட தமிழகமெங்கும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த மின்தடையால், பள்ளி - கல்லூரி மாணவர்கள், குடும்பப் பெண்கள், பணி செய்வோர், வணிக நிறுவனத்தினர் என அனைத்துத் துறையினரும் பெரும் பாதிப்பில் உள்ளனர்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆகிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மின்தடை நேரங்களின்போது - குறிப்பாக இரவு நேர மின்தடையின்போது, இந்த திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர்கள் மறுநாளுக்கான பாடங்களை மனனம் செய்ய வாய்ப்பின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, புதிதாக 25 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட மின் இயக்கி (ஜெனரேட்டர்) ஒன்று, மத்ரஸா அபிமானிகளின் அனுசரணைகளைப் பெற்று, ரூபாய் 4 லட்சத்து 20 ஆயிரம் தொகைக்கு வாங்கி நிறுவப்பட்டுள்ளது.
இந்த மின் இயக்கியை முறைப்படி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 05ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) மாலை 05.30 மணியளவில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கீழ்ப்பகுதி வெளிப்புறத்திலுள்ள - ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர்களுக்கான இல்லங்களையொட்டிய வளாகத்தில் நடைபெற்றது.
ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் தலைமையேற்று, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மத்ரஸா மாணவர்களால் பைத் பாடப்பட்டதைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
1971ஆம் ஆண்டு ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது. துவக்கத்தில் குருவித்துறைப் பள்ளி வளாகத்திலும், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகத்திலும், அந்தந்த நிர்வாகங்களின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த மத்ரஸா, பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து, சில மாதங்களில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் - அன்றைய நிர்வாகிகளின் அனுமதியைப் பெற்று நடைபெறத் துவங்கியது. அன்று முதல் இன்றளவும் இங்கேயே இயங்கி வருகிறது.
1985ஆம் ஆண்டு, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா துவக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு, மத்ரஸாவின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா நிறைவுற்ற பின்னர், மத்ரஸா முதல்வர் என்ற அடிப்படையில் என்னை அழைத்து, என் நெற்றியில் முத்தமிட்ட மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் அப்போதைய நிர்வாகிகளான மர்ஹூம் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் என்ற ஸாலிஹ் ஹாஜி, மர்ஹூம் ஹாஜி என்.கே.காதிர் ஸாஹிப் என்ற காதர்சா ஹாஜி ஆகியோர், “அழகான முறையில் இந்த மத்ரஸாவை நடத்திக்கொண்டு வருகிறீர்கள்... உங்களுக்கு ஸபையின் சார்பில் என்ன செய்து தர வேண்டும்?” என்று கேட்டனர். “எல்லாம் சிறப்பாகவே செய்து தந்துள்ளீர்கள்... ஒரு குறையுமில்லை” என்று நான் பதிலளித்தேன்.
இவர்கள் இருவரும், மர்ஹூம் ஹாஜி எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் என்ற சுல்தான் ஹாஜி அவர்களும் இருந்த காலத்தில், இந்த புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் எந்நாளும் இயங்கும் வகையில் கல்வி நிறுவனம் ஒன்று இயங்க வேண்டும் என்ற வாசகத்தை மினிட் புத்தகத்திலேயே இடம்பெறச் செய்துள்ளதை நான் அறிந்து வைத்துள்ளேன்.
அன்று முதல் இன்று வரை, தாய்ச்சபையான மஜ்லிஸின் கண்ணியத்தைப் பாதுகாத்து, ஒவ்வொரு நாளும் மஜ்லிஸ் வளாகத்தை - பெரும்பாலும் மத்ரஸாவின் செலவிலேயே பராமரித்தும் வருகிறோம்...
இந்த மஜ்லிஸ் வளாகத்தில் ஆணி ஒன்றை அறைவதாக இருந்தாலும் கூட, மஜ்லிஸ் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றே செய்யப்பட்டு வருகிறது. பல ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு நிறைய பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில்தான் இன்று இந்த மின் இயக்கி - ஜெனரேட்டர் வாங்கி நிறுவப்பட்டுள்ளது. வழமை போல இதுவும், மத்ரஸா ஹாமிதிய்யா, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகிய இரண்டிற்கும் முழுமையாக பயன்படுத்தப்படும்.
இன்றைய தலைமுறையினருக்கு இச்செய்திகள் மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் இவற்றை நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்...
இவ்வாறு, ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, ஹாமிதிய்யாவின் கவுரவ பேராசிரியரும், இலங்கை - கொழும்புவிலுள்ள அல்ஜாமிஉல் அழ்ஃபர் - சம்மாங்கோட் பள்ளியின் இமாமுமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், மின் இயக்கி - ஜெனரேட்டர் கருவியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரப் பிரமுகர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் ஜெனரேட்டர் கருவியின் ஸ்விட்சை கையால் இயக்கி, துவக்கி வைத்தார்.
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் மிஸ்பாஹீ நன்றி கூற, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ துஆவுடன் - மாலை 06.30 மணியளவில் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகிகள், வைபவ கமிட்டியினர், மத்ரஸா ஹாமிதிய்யா நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னாள் - இந்நாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸா ஹாமிதிய்யாவின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். |