மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து கண் மருத்துவ இலவச முகாமை, இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற முகாம் துவக்க நிகழ்ச்சியில், காயல் இரத்த தானக் கழக நிர்வாகிகளான ஹாஜி எல்.எஸ்.அன்வர், கே.முஹ்ஸின் முர்ஷித், பி.எம்.முஹம்மத் ஃபாரூக் (ஓ.எஸ்.), ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆ பிரார்த்தனை செய்ய, ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி முதல் பயனாளியாகக் கலந்துகொண்டு, கண் மருத்துவ ஆலோசனை பெற்று முகாமைத் துவக்கி வைத்தார்.
இம்முகாமில், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கண் மருத்துவ பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கினர்.
இம்முகாமில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 153 பயனாளிகள் கலந்துகொண்டு, கண் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களுள் 13 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |