கல்வியில் சிறந்து விளங்கும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்களுக்கு, மருத்துவம் - பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக, அவர்களது கல்விக் கட்டணம், விடுதி செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களுக்கும் முழுப்பொறுப்பேற்று வழங்கி வருகிறது - ஹாங்காங்கிலுள்ள காயல்பட்டினம் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் “காயல்பட்டினம் மாணவர் நல அமைப்பு - Kayalpatnam Students Welfare Association (KSWA).
இவ்வமைப்பின் சார்பில், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
இறையருளால் எமது ஹாங்காங் கஸ்வா அமைப்பின் 2013ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்வுகள், ஹாங்காங்கிலுள்ள சுற்றுலாத் தலமான Pak Sha O, Sai Kung என்ற மலைப்பகுதியில், இம்மாதம் 08 மற்றும் 09ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது.
08ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 04.00 மணியளவில், 64 உறுப்பினர்கள் மற்றும் காயலர்களை உள்ளடக்கிய சிற்றுலாக் குழுவினர் இரண்டு பேருந்துகளில் சிற்றுலாத் தலத்திலுள்ள இளைஞர் விடுதியைச் சென்றடைந்தனர்.
நிகழ்விடம் வந்திறங்கியதும், அஸ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் மாலை நேர தேனீர் பரிமாறப்பட்டது.
பின்னர், காயல்பட்டினம் வட்டார தமிழ்ச் சொல் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, பொது அறிவு வினாடி-வினா உள்ளிட்ட சுவையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக, சிற்றுலாக் குழுவினர் 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டனர்.
போட்டிகளின்போது, அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்...
வார்த்தை விளையாட்டு...
வெற்றிக் களிப்பில் போட்டியாளர்கள்...
முன்னதாக, சிற்றுலா நடைபெறும் இரண்டு நாட்களுக்கும் சமைப்பதற்காக, சமையல் பாத்திரங்கள், அடுப்புகள், எரிவாயு உருளைகள் என அனைத்தும் ஆயத்தம் செய்து கொண்டு வரப்பட்டிருந்தது. இரண்டு நாட்களிலும் சமைப்பதற்காக, சிறப்பு உணவு தயாரிப்பாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
முதல் நாளன்று மாலையில் தேனீர், இரவுணவாக புரோட்டா மற்றும் கோழிக்கறி சமைத்துப் பரிமாறப்பட்டது. பின்னிரவில் அனைவருக்கும் ப்ளேன் டீ பரிமாறப்பட்டது.
மறுநாள் காலையில் தேனீர், அதனைத் தொடர்ந்து காலை உணவாக கொத்து புரோட்டா, மதிய உணவாக நெய்ச்சோறு, களறிக்கறி, கத்திரிக்காய் - மாங்காய், மாலையில் மீண்டும் தேனீர் என இரு நாட்களும் களை கட்டியது சமையலும், உண்ணலும்.
இரண்டாம் நாளன்று, கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது. ஜனாப் ஷம்சுத்தீன் முன்னிலை வகித்த இக்கூட்டத்தை, ஹாஃபிழ் சுல்தான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
கஸ்வாவின் செயல்பாடுகள் குறித்த 2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையை எம்.செய்யித் அஹ்மத் சமர்ப்பித்தார்.
வருடாந்திர வரவு - செலவு கணக்கறிக்கையை எஸ்.எச்.முஹம்மத் மக்பூல் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட அப்துல் அஜீஸ் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கஸ்வாவின் செயற்பாடுகள், அதன் நற்பணிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மகத்துவம் உள்ளிட்டவை குறித்து, கஸ்வா செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஐ.அப்துல்லாஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர், கஸ்வா அபிமான ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகை அனுசரணை குறித்த தகவல்களை, கானாப்பா எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் கூட்டத்தில் விளக்கினார்.
எம்.ஏ.கே.அப்துல் பாஸித் நன்றி கூற, ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் துஆவுடன் கூட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன.
பின்னர், குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் பல வழங்கப்பட்டன.
கூட்ட நிறைவுக்குப் பின், மதிய உணவை அனைவரும் கூட்டாக அமர்ந்துண்டனர்.
பின்னர், கால்பந்து, க்ரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
குற்றாலத்தின் Bed Fallsஐ நினைவூட்டும் அருவிக் குளியல், ஏரிக்குளியல் என அனைவரும் தண்ணீரில் உற்சாகக் குளியலை அனுபவித்தனர்.
இரண்டு நாட்கள் இன்பக் கொண்டாட்டம் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுற்றுவிட்டதோ என்ற ஆதங்கத்துடன், மீண்டும் இதுபோன்ற இன்பச் சிற்றுலாவை எதிர்பார்த்தவர்களாக அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
கஸ்வாவின் தனித்துவமிக்க செயல்பாடுகளே அதன் வெற்றிக்குக் காரணம் என பொதுமக்கள் கூறும் செய்திகளை செவியேற்க முடிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய உறுப்பினர்களின் ஒற்றுமை, வலிமையான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் துணையுடன் இனி வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளை இவ்வமைப்பு காண வேண்டுமென அனைரும் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் யாவர் மீதும் நிறைவாக சூழட்டுமாக, ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு, கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:35 / 17.06.2013] |