துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவரது கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அப்பள்ளியில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பியின் கணவர் எஸ்.ஏ.ஸாஹிப் தம்பி, இம்மாதம் 12ஆம் தேதி புதன்கிழமையன்று காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில், இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை - துளிர் பள்ளியின் இவ்வாண்டிற்கான துவக்க வகுப்பு நாளன்று காலை 09.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
துளிர் அறக்கட்டளை தலைவர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை கூட்டத்திற்குத் தலைமை தாங்கி இரங்கல் உரையாற்றினார்.
துளிர் பள்ளியின் பராமரிப்பு, மாணவர் நலன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி என்றால், அதற்காக முழு ஒத்துழைப்பு நல்கி, தானும் உடனிருந்து பணிகளைக் கவனித்தவர் மர்ஹூம் ஸாஹிப் தம்பி அவர்கள் என்று கூறிய அவர்,
துளிர் வளாகத்தில் கேளரங்கம் கட்டப்பட்டபோது, இப்படியோர் இடம் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக, தன் மகனின் திருமணத்தை துவக்கமாக இந்த அரங்கில் நடத்திக்காட்டி முன்னுதாரணத்தை உருவாக்கியவர்கள் இத்தம்பதி என்று புகழ்ந்துரைத்தார்.
ஊரிலிருந்தாலும், வெளியூர்களிலிருந்தாலும் - எந்நேரமும் துளிர் பள்ளியைப் பற்றிய சிந்தனையுடனேயே அவ்விருவரும் இருந்து வந்ததாகக் கூறிய அவர், மறைந்த ஸாஹிப் தம்பி அவர்களது மண்ணறை - மறுமை வாழ்வுகளை அல்லாஹ் ஒளிமயமாக்கி வைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து தனதுரையை நிறைவு செய்தார்.
அடுத்து, துளிர் பள்ளியின் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான் உரையாற்றினார். துளிர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, தன் கணவரின் மறைவால் மிகவும் மனமுடைந்துள்ளதாகக் கூறிய அவர், அவருக்கும் - அவரது குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுமென கண்ணீர் மல்க பிரார்த்தித்து தனதுரையை நிறைவு செய்தார்.
இந்த இரங்கல் கூட்டத்தில், மறைந்த ஸாஹிப் தம்பி குடும்பத்தின் சார்பில், அன்னாரது மருமகன் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் கலந்துகொண்டார். மறைந்த ஸாஹிப் தம்பி அவர்களின் மறைவுக்காக தாங்கள் யாவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பதாகவும், அனைவரும் அவர்களது மறுமை நல்வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
துளிர் பள்ளியின் ஆசிரியை ஹலீமா ஆலிமா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இக்கூட்டத்தில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |