திருநெல்வேலி மாவட்டதில் உள்ள பாபநாசம் அணை உட்பட இதர அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம்,
சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள பாசனப் பகுதிகளுக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக 20.6.2013 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 40,000 ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |