காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் சார்பில், ‘மவ்லவீ - ஆலிம் மஹ்ழரீ’ மற்றும் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா, இம்மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமையன்று (இன்று) காலை 09.30 மணியளவில், கல்லூரி வளாகத்தில் - மர்ஹூம் கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ நினைவரங்கில் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அடுத்து, அனைவரும் நின்றவாறு அஹ்மதுல்லாஹ் பைத் பாடினர். அதனைத் தொடர்ந்து, அஸ்லம் மஹ்ழரீ குழுவினர் கீதம் பாடினர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, கேரள மாநிலம் - கருநாகப்பள்ளி சாலியம் ஜமாஅத் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் தாஹா மஹ்ழரீ, புதுக்கோட்டை ஹிக்மத்துல் பாலிகா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.அப்துல் ஜப்பார் பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ கே.டி.முஹம்மத் குட்டி முஸ்லியார் சிறப்புரையாற்றினார். முன்னதாக, சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு - “கவ்துல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ” விருது வழங்கப்பட்டது.
பின்னர், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் மறைந்த முதல்வர் மவ்லவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் 10 தலைப்புகளிலான உரைகளடங்கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர் முதற்பிரதியை வெளியிட, மறைந்த மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் மகன் எஸ்.எஸ்.கே.அப்துல்லாஹ் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர், அக்குறுந்தகடு பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஸனது வழங்கி, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
கல்லூரியில், 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 11 மாணவர்களுக்கு இவ்விழாவில், ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ ஸனதும் (பட்டச் சான்றிதழ்), திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - கேம்பலாபாத் நகரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனதும் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:-
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அப்துல் குத்தூஸ், அவரது சொந்த ஊரான கேம்பலாபாத்தின் முதல் ஹாஃபிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஏராளமான மாணவர்கள் ‘ஆலிம் மஹ்ழரீ’ ஸனதும், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனதும் பெறும் இவ்விழாவில், உள்ளூர் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாதது வருந்தத்தக்கது என்று அவர் ஆதங்கத்துடன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழிலும், மலையாளத்திலும் ஏற்புரையாற்றினர்.
பின்னர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனியார் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அந்த வரிசையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் - ‘ஹாஃபிழ்கள் ஊக்கத்தொகை வழங்கும் அதன் திட்டத்தின் கீழ், இவ்விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரத்து ஐநூறு தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் சார்பில், அதன் உள்ளூர் துணைப் பிரதிநிதி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஊக்கப் பரிசை மாணவரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் ஆலிம் கல்விப் பிரிவு, திருக்குர்ஆன் மனனப் பிரிவு, திருக்குர்ஆன் மக்தப் ஆகிய பாடப் பிரிவுகளின் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் உதவி செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
பின்னர், விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் பட்டம் பெற்ற மாணவர்களுடன் கைலாகு செய்து, வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், கணக்குத் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவுற்ற பின்னர், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |