காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், அனைத்து வார்டுகளிலும் டம்பர் ப்ளேசர் வாகனம் மூலம் குப்பை சேகரிப்பதற்கான நவீன குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தொட்டிகளில் குப்பைகளை மொத்தமாகக் கொட்டுவதால், நாள்தோறும் குப்பைகளைக் கையில் வைத்துக்கொண்டு, குப்பை வண்டிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் தற்போது ஓரளவுக்கு குறைந்துள்ளது.
காயல்பட்டினம் 08ஆவது வார்டுக்குட்பட்ட கொச்சியார் தெருவின் தென்பகுதியில் நவீன குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 06.00 மணியளவில் அவ்வழியே நடைப்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த சிலர், குப்பைத் தொட்டி அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் புகைமூட்டம் உள்ளதை அவதானித்து, அருகில் சென்று பார்த்தபோது, குப்பைத் தொட்டிக்குள்ளிருந்த குப்பைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தெரிய வந்தது.
அண்டை வீட்டார் சிலரின் ஒத்துழைபபுடன், கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் நீரூற்றி அணைத்தனர். தீ எரிந்த காரணத்தால், குப்பைத் தொட்டி சேதமுற்று காணப்பட்டது.
பெரும்பாலும், இதுபோன்ற குப்பைத் தொட்டிகள் - குடியிருப்புகள் அதிகமில்லாத வெற்றிடங்களிலேயே வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாத பொதுமக்களில் சிலர் இதுபோன்று குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்துச் செல்வதாக, விவரமறிந்தோர் கூறினர்.
தகவல் & படங்கள்:
M.புகாரீ
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம் |