அதிக எடை கொண்ட மரத்தைச் சுமக்க இயலாமல், பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததால், காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் இன்றிரவு வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், காட்டு மகுதூம் பள்ளியை அடுத்தாற்போல் அமைந்துள்ளது சூர்யா டிம்பர் என்ற பெயருடைய தனியார் மர இழைப்பகம்.
இந்நிறுவனத்திற்குத் தேவையான மரங்கள் கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, நிறுவனம் அமைந்துள்ள சாலையின் இருபுறங்களிலும் கிடத்தப்பட்டிருக்கும். அவ்வப்போது, மரங்கள் இழைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஆலைக்குள் எடுத்துச் செல்லப்படும்.
இன்றிரவு சுமார் 07.00 மணியளவில், அந்த ஆலைக்குத் தேவையான - அதிக எடை கொண்ட மரமொன்றை பொக்லைன் இயந்திரம் மூலம் தூக்க முனைந்தபோது, அதன் எடை தாங்காமல் இயந்திரம் கவிழ்ந்து விழுந்தது. இதனால், தூக்கப்பட்ட மரம் சாலையை அடைத்தாற்போல் கிடந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில், பொக்லைன் இயந்திர ஓட்டுநர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். விபத்து நிகழ்ந்தபோது, அப்பகுதியில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |