சென்னை ஸுபுலுஸ் ஸலாம் திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன) மத்ரஸாவில், நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டம்) பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள ஸுபுலுஸ் ஸலாம் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா பட்டமளிப்பு விழா, இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஏராளமான மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் (ஸனது) வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தானின் மகன்வழிப் பேரனும், ஹாஜி மொகுதூம் முஹம்மத் என்பவரின் மகள்வழிப் பேரனும், தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு முஹ்யித்தீன் அப்துல் காதிர் - கதீஜத்துல் புஷ்ரா தம்பதியின் மகனுமான, பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் என்ற மாணவரும்,
காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையின் முன்னாள் தலைவரும் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத் தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் நிர்வாகியுமான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீயின் மகன்வழிப் பேரனும், ஹாஃபிழ் முஹம்மத் ஸஈத் என்பவரின் மகள்வழிப் பேரனும், அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ - ஆஸியா கதீஜா ஆலிமா அரூஸிய்யா தம்பதியின் மகனுமான ஏ.என்.இக்ராம் ஃபாஸீ
ஆகிய இரண்டு மாணவர்கள், இப்பட்டமளிப்பு விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) பெற்றுள்ளனர். சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் யஃகூப் காஸிமீ, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
இம்மாணவர்களை, அவரவர் ஜமாஅத்தினரும், குடும்பத்தினரும் வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மாணவர் சுல்தான் ஜமாலுத்தீன் ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளதையொட்டி, இன்று காலை 10.30 மணியளவில், அப்பள்ளி வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, பட்டம் பெற்ற மாணவரை மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்.
மவ்லவீ எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியை நிறைவுபடுத்தினார்.
பின்னர், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவருடன் அனைவரும் கைலாகு செய்து, வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் கலந்துகொண்டனர்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 17:42 / 20.06.2013] |