கத்தர் காயல் நல மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டத்தில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராவதற்கு 8 பேர் இசைவு தெரிவித்துள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறை ஏகன் திருப்பெயரால்.
நிகழ்முறை:
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் இல்லத்தில் நடைபெற்றது. இளங்குயில் ஏ.எச்.ஃபாயிஸ் இறைமறையை இனிதாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர், துவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைவர் உரை:
அடுத்து, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் சிறப்புரையாற்றினார்.
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
கடந்த மாதம் நடந்து முடிந்த புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 110 பெண்கள் உட்பட 160 பேர் பயன்பெற்றதாகவும், நோயின் ஆரம்ப நிலை அறிகுறி கண்டறியப்பட்டவர்கள், ரோஸ் கார்டன் மருத்துவக் குழுவினரின் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்புடன், அல்லாஹ்வின் உதவியால் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார். இந்த முகாமை இணைந்து நடத்திய, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கும், முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எம்.எஸ்.மீரான் தலைமையில், முகாம் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.
இக்ராஃ தலைவருடன் சந்திப்பு:
கடந்த வாரம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் கத்தர் நாட்டிற்கு வருகை தந்ததாகக் கூறிய அவர், அப்போது அவருடன் கத்தர் காயல் நல மன்ற நிர்வாகிகள் நடத்திய கலந்தாலோசனை குறித்த விபரங்களை விரிவாக விளக்கிப் பேசினார்.
உலக காயல் நல மன்றங்களால் நிர்வகிக்கப்படவிருக்கும் ‘ஷிஃபா’ மருத்துவ கூட்டமைப்பில் இணைந்து செயல்படுவதென்றும், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் அமைக்கும் விஷயத்தில், இக்ராஃ தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தின் ஒப்பற்ற முயற்சிக்கும் கத்தர் காயல் நல மன்றம் முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும் அச்சந்திப்பின்போது அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களது சீரிய தலைமையில், ஜித்தா காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் சிறப்புற செயல்பட அவர் தனதுரையில் வாழ்த்திப் பிரார்த்தித்தார்.
இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக 8 பேர்...
இக்ராஃ தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, அதன் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு இசைவு தெரிவித்த - கத்தர் காயல் நல மன்றத்தின் 8 உறுப்பினர்களது பெயர் பட்டியலை கூட்டத்தில் வாசித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இவ்வாண்டிற்குள்ளாகவே இக்ராஃ தனது சொந்தக் கட்டிடத்தில் செயல்பட அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்றும், அதற்கான அடிப்படை முயற்சியாக, ரூபாய் 15 ஆயிரம் தொகை செலுத்தி, மன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இக்ராஃ ஆயுட்கால உறுப்பினர்களுக்கு பாராட்டு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் - விரைவில் சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும் என்ற நன்னோக்கில், ரூபாய் 15 ஆயிரம் தொகை செலுத்தி, அதன் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு இசைவு தெரிவித்துள்ள மன்ற உறுப்பினர்களை இக்கூட்டம் பாராட்டுவதோடு, இதே நோக்கத்திற்காக இன்னும் அதிகளவில் மன்ற உறுப்பினர்கள் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - இளைஞர் ஐக்கிய முன்னணி நூலகத்திற்கு அனுசரணை:
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பயன்படுத்தும் நூலகம் என்ற அடிப்படையில், காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலகத்திற்கு, பயனுள்ள நூற்கள் வாங்குவதற்காக – கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் மன்றத்தின் அனுசரணையை தொடர்ந்து வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, எதிர்வரும் ரமழான் மாதத்தில், ஜூலை 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது. நிகழ்விடம் - நிகழ்முறை உள்ளிட்டவை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தீர்மானம் 4 - அரசுப் பொதுத் தேர்வில் வெற்றிபெற்றோருக்கு பாராட்டு:
நடைபெற்று முடிந்த 10ஆம் - 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர், அதற்காக உழைத்த அனைத்து பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆர்வமூட்டிய பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றம் தனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 5 – பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து கத்தர் காயல் நல மன்றம் சார்பில், நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை, வரும் 30.06.2013 அன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அந்நிகழ்ச்சியை - தாயகம் செல்லும் மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வைக்க இக்கூட்டம் அவரைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 - அவதூறு அறிக்கை சமர்ப்பித்த டி.சி.டபிள்யு. நச்சாலை நிர்வாகத்திற்குக் கண்டனம்:
காயல் நகரில் பெருகிவரும் கணக்கற்ற நோய்களுக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்ற டி.சி.டபிள்யு. நச்சாலை நிர்வாகத்தின் - நமது நகரம் மற்றும் நமது வாழ்க்கை முறை குறித்த அவதூறு அறிக்கை, நகர மக்களின் நெஞ்சங்களில் மிகப்பெரிய வலியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தரங்கெட்ட அறிக்கைக்கு கத்தர் காயல் நல மன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. அத்துடன், அதன் நச்சு தயாரிப்புகளை எதிர்த்திடும் அனைத்து முயற்சிகளுககும் கத்தர் காயல் நல மன்றம் முழுமையாக துணை நின்று ஒத்துழைப்பளிக்கும் என தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீனின் துஆ - பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், அமீரக காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் காழி அலாவுத்தீன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார். கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |