காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய எஸ்.ரத்னசூர்யா என்ற மாணவி, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாடத்தில், 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாணவியான இவர் சுயம்புலிங்கம் - மேரி ஆகியோரின் மகளாவார். தந்தை, தாய் இருவருமே கட்டுமானப் பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். மார்ச் 24ஆம் தேதியன்று இம்மாணவி தேர்வெழுதிக்கொண்டிருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த - கட்டுமானத் தொழில் செய்யும் செல்லத்துரை என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமாகி மூன்று நாட்கள் கழித்து, மார்ச் 27ஆம் தேதியன்று இவர் உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாட தேர்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இம்மாணவி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பயில திட்டமிட்டுள்ளார். இதற்கான கட்டணமான ரூபாய் 26,000 செலுத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தால், காயல் நல மன்றங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியை இவர் கோரியுள்ளார்.
|