காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் (MARO) பயின்று, கல்வி - ஒழுக்கத்தில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் பயின்று, கல்வி - ஒழுக்கத்தில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்குவதற்காக, இம்மாதம் 07ஆம் தேதியன்று பரிசளிப்பு விழா மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
புதுப்பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.புகாரீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். மத்ரஸா மாணவர் இப்றாஹீம் அன்ஸாரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அடுத்து, மத்ரஸா முதல்வர் மவ்லவீ ஏ.எச்.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ - நோன்பின் மகத்துவம் குறித்தும், ரமழான் மாதத்தில் செய்யப்பட வேண்டிய நல்லமல்கள் பற்றியும் விளக்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.
பின்னர் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில்,
>> சென்ற கல்வியாண்டில் நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும்,
>> மத்ரஸா வகுப்புகள் நடைபெற்ற காலங்களில் விடுமுறை அதிகம் எடுக்காமல் சிறந்த வருகைப் பதிவு வைத்துள்ள மாணவர்களுக்கும்,
>> சென்ற ஆண்டு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்ற மாணவர்களுக்கும்,
>> திருமறை குர்ஆனின் சிறிய சூராக்கள் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா தலைவர் மற்றும் மத்ரஸா முதல்வர் ஆகியோரிணைந்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஃபாத்திஹா துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
ரமழான் மாதம் முழுக்க மாணவர்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. ஷவ்வால் மாதம் 6 நோன்பு நிறைவுற்ற பின்னர் மத்ரஸா வகுப்புகள் மீண்டும் துவங்கும் என விழாவின் நிறைவில் அறிவிப்புச் செய்யப்பட்டது.
இவ்வாறு, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
ஆசிரியர்
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை
(புதுப்பள்ளி வளாகம்) |