நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பல்வேறு சிறப்பு அமல்கள் (கிரியைகள்) பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் என்ற இரட்டைக் குளத்துப் பள்ளியின் ரமழான் இரவு நேர நடைமுறைகள் மற்ற இடங்களைக் காட்டிலும் சற்றே வேறுபட்டு அமைந்திருக்கும்.
அங்கு, ரமழான் இரவுகளில் இஷா தொழுகைக்குப் பின் தராவீஹ் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து வித்ரிய்யா மஜ்லிஸ் நடைபெறும். இந்நிகழ்வுகளில், அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொள்வர்.
பள்ளியினுள் வித்ரிய்யா மஜ்லிஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், வெளிப்பள்ளியில் - பள்ளி நிர்வாகிகள் மற்றும் கஞ்சி கமிட்டியினர் இணைந்தமர்ந்து, அன்றன்றைய வரவு - செலவு கணக்குகளைப் பதிவேடுகளில் பதிவு செய்து, சரிபார்க்கும் பணியைச் செய்வர்.
வித்ரிய்யா மஜ்லிஸ் நிறைவில் அனைவருக்கும் தேனீர் போன்ற குடிப்புகளும், பலவகை தின்பண்டங்களை உள்ளடக்கிய ‘நார்ஷா’வும் வினியோகிக்கப்படும்.
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், முரசு (டங்கா, நகரா) அடித்தவாறு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், பொதுமக்களை அவரவர் இல்லப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வர்.
முரசு பள்ளிவாயிலின் வெளியே வந்தவுடன், அங்கு துஆ இறைஞ்சப்படும். பின்னர், அனைவரும் தமது வலது கையை உயர்த்தி, ஆட்காட்டி விரலை நீட்டியவாறு ஒரே குரலில், “தீன் தீன் முஹம்மத்; ஸலவாத் முஹம்மத்; அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹ்” என உரக்கக் கூறுவர்.
பின்னர், பள்ளியிலிருந்து சதுக்கைத் தெரு வழியாக பெரிய சதுக்கை வரையில் ஒரு நாளும், பள்ளியிலிருந்து நெய்னார் தெரு வழியாக குத்பா பெரிய பள்ளி வரை மறு நாளும் தெருவலமாகச் சென்று, ஜமாஅத்தினரை அவரவர் இல்லங்கள் வரை சென்று அனுப்பி வைப்பர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இப்பள்ளியைச் சுற்றி குடியிருப்புகள் மிகவும் குறைவாகவும், சுற்றுவட்டாரம் முழுக்க காடுகள் போலவும் இருந்தமையால், பள்ளிக்கு வரும் பொதுமக்கள் தமதில்லங்கள் வரை அச்சமின்றி செல்வதற்காகவே இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றளவும் இந்நடைமுறை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |