எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் முன்முயற்சியில், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி நபர் அனுசரணைகளின் மூலம், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் இமாம் - பிலால்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை வழங்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வகைக்கு அனுசரணையளிக்க உலக காயலர்களைக் கோரி, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்பின் காயல் நல மன்ற தலைவர், செயலாளர் மற்றும் செயற்குழுவினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், இஸ்லாமிய மற்றும் நகர்நலன் குறித்த தூய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக.
வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அனைத்துலக காயல் நல மன்றங்களின் மகத்தான ஒத்துழைப்புடன் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் - பிலால்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் அது செயல்வடிவமும் பெற்றுள்ளது.
நாம் அவர்களுக்கு வழங்கும் தொகை சில ஆயிரங்கள்தான் என்றாலும், அதிக செலவைச் சந்திக்கும் பெருநாள் நேரத்தில் நாம் அளிக்கும் இந்த ஊக்கத்தொகை அவர்களது பெரும் பாரத்தை இறக்கி வைத்துள்ளது என்பதை அவர்களே வாயாரச் சொன்னதைக் கேட்க முடிந்தது. அந்த வகையில், நடப்பாண்டும் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நகரின் அனைத்துப் பள்ளிகளிலுள்ள மொத்த இமாம்களின் எண்ணிக்கை 35
பிலால்களின் எண்ணிக்கை 35
இவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளித்தால், ஏற்படும் மொத்த செலவினம் ரூ. 3,50,000/-
இவ்வகைக்காக, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி அனுசரணை கோரப்பட்டுள்ளது. அது தவிர, இது விஷயத்தில் ஆர்வப்படும் தனி நபர்களின் அனுசரணையையும் பெற்றிடும் நோக்குடன் உலக காயலர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
நலிவுற்றுள்ள இமாம் - பிலால்கள் தனவந்தர்களிடம் கையேந்தி, கூனிக்குறுகி நிற்பதைத் தவிர்த்து, அவர்களை கண்ணியமிக்கவர்களாக நடைபோடச் செய்ய வேண்டுமெனில் இதுபோன்ற பெருநாள் ஊக்கத் தொகைகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகிறது என்பதைக் கருத்திற்கொண்டு,
இன்ஷாஅல்லாஹ், 25.07.2013 தேதிக்குள் தங்கள் அனுசரணைத் தொகையை sayyidmiskeen@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது
தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் (கைபேசி எண்: +66 817207906)
செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்கள் (கைபேசி எண்: +66 867577296)
அல்லது செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு உவைஸ் கைபேசி எண் +91 99418 85342
ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டோ தெரிவித்து, இத்திட்டத்தை சிரமங்களெதுவுமின்றி, குறித்த காலத்தில் இறையருளால் வெற்றிகரமாக செய்து முடிக்க உறுதுணை புரியுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூர் நலனுக்காக நாம் செய்யும் இந்த தன்னலமற்ற நற்காரியங்களை கபூல் செய்து, அவற்றுக்கான பலனை இம்மை - மறுமையில் நமக்கு நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். |