அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கிய இம்முகாமில், 01 முதல் 07ஆவது வார்டு வரை (18வது வார்டு உட்பட) குடியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தீவுத்தெருவில் ஈக்கியப்பா தைக்கா அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தில், 08ஆவது வார்டு பொதுமக்களிடமும், ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் 09ஆவது வார்டு பொதுமக்களிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.
08ஆவது வார்டு விபரங்கள் சேகரிப்புப் பணி இம்மாதம் 11ஆம் தேதியுடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து, 11ஆவது வார்டின் ஒரு பகுதியினரிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
தற்போது, காயல்பட்டினம் ஓடக்கரை துவக்கப்பள்ளி வளாகத்திலும், தாயிம்பள்ளிக்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்க வளாகத்திலும், 10ஆவது வார்டைச் சேர்ந்த பொதுமக்களின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளை முதல், இப்பகுதிகளில் 11, 12ஆவது வார்டு பொதுமக்களின் விபரங்கள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், நகர காங்கிரஸ் பிரமுகர் எம்.எம்.ஷாஜஹான் ஆகியோரும், தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாக கட்டிடத்தில், முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரும் தமது விபரங்களை சமர்ப்பித்தனர்.
தீவுத்தெருவில் நடைபெற்ற முகாம் பணிகளை, வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் பார்வையிட்டு, தேவையான விபரங்களைக் கேட்டறிந்தார்.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் இம்முகாம்களில், அந்தந்தப் பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட - நகரின் பொதுநல அமைப்பினரும் வழிகாட்டு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
தகவல் & படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |