தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற - தமிழக அரசின் அனைத்துத் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு கோரி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றியுள்ளார். விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் அனைத்து துறை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் முன்னிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைiமையில், நேற்று (ஜூலை 25ஆம் தேதி) நடைபெற்றது.
சுற்றுலா துறை அமைச்சர் உரை:
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் லெ.சசிகலா புஷ்பா, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜு.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை, மாநகராட்சி ஆணையர் மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை எளிய ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை உங்களைப் போன்ற துறை அலுவலர்கள் மூலமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
வருவாய்த் துறையைச் சார்ந்த திட்டங்களான முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ள மனுதாரா;களின் கோரிக்கைகளை உடனே பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்குவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செய்ய வேண்டும். அதேபோல் வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் விலையில்லா அரிசி வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவுக் கடைகளிலும் ஊட்டி டீ விற்பனையை துரிதப்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அத்தியவாசியப்பொருட்கள் அனைத்தும் உரிய நேரத்தில் கிடைக்க அந்த துறை பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெயர் பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும், மாநகராட்சியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும் மாவட்ட நிர்வாகத்துடன்; இணைந்து பணியாற்ற வேண்டும். மின்சாரத்துறையினர் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரத்துறை நிலையங்கள் சுத்தமாக பராமாpப்பதுடன் கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தயாரிக்கப்படும் மதிய உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்ற வரும் வளர்ச்சி நலத்திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர துறை அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.
அரசு அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளுர் திட்டக் குழுமத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகளின் மூலமாக நடைபெற்று வரும் மக்கள் நலப்பணிகள் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் தரமானதாகவும், ஒப்பந்தம் செய்யப்படட காலத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், மக்கள் நலப் பணிகள் அடிப்படை வசதிகள் குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும்.
பொதுப்பணித்துறையில் நீர் ஆதாரங்களாக விளங்கக்கூடிய குளம், கண்மாய், கிணறுகள், மழை காலங்களுக்குள் தூர் வாரப் பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சாpன் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், மிதிவண்டி வழங்கும் திட்டம், விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக பொதுமக்களுக்கு கிடைக்கின்ற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் அரசுத்திட்டங்களை முழுமையாக ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் முன்வைத்த கோரிக்கைகள்:
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
சல்லித்திரடு பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்தல்:
காயல்பட்டினத்தில் மழைக்காலங்களின்போது, சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதியில் மழை நீர் அதிகளவில் தேங்கும். அதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கும் நிலை ஆண்டுதோறும் இருந்து வருகிறது.
நகராட்சியின் சார்பில் எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்பகுதி மக்களுக்கு முழு அளவில் நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத நிலையுள்ளது. இதனால், இரு சாரார் வசிக்கும் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதனைத் தவிர்த்திட, சல்லித்திரடு பகுதியில் தமிழக அரசின் சார்பில் நிலையான மழை நீர் வடிகால் அமைத்துத் தர வேண்டும்.
கடற்கரை பராமரிப்பு:
கடற்கரையில் வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் - காயல்பட்டினம் நகராட்சியிடமிருந்து செயல்திட்டம் வடிவமைத்துக் கேட்டிருந்தது. கடற்கரையை அழகுபடுத்தல், வசதிகளை அதிகரித்தலை விட, கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதும் மட்டுமே தற்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாக காயல்பட்டினம் நகராட்சி கருதுவதால், அதனடிப்படையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, அதற்கான நிதியொதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழக முதல்வரின் பசுமைத் திட்டம்:
தமிழக முதல்வர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் மரங்கள் நட அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் முழு வெற்றியடைந்து, தமிழகம் சோலைவனமாக வேண்டுமானால், அதில் சில மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது, வெறுமனே மரங்களை நட்டுவதற்கு மட்டும் நிதியொதுக்கீடு செய்யாமல், அவற்றுக்கு வேலியமைத்து, நீரூற்றி பராமரிக்கவும் நிதியொதுக்கீடு செய்தால் மட்டுமே இத்திட்டம் முழு வெற்றி பெறும் என்பதைக் கருத்திற்கொண்டு ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
காயல்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை:
காயல்பட்டினத்தில் நாள்தோறும் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளைக் கொட்ட முறையான இடம் இல்லாத நிலையுள்ளது. இதற்காக 5 ஏக்கர் நிலம் பெற்றிட தமிழக அரசு நிதியொதுக்கீடு செய்தும், நகரில் முறையான இடத்தைப் பெற்றிட இயலாத நிலையுள்ளது.
எனவே, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நிலங்களை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து, புறம்போக்கு நிலங்களை இனங்கண்டு நகராட்சிக்குத் தந்துதவ வேண்டும்.
இரண்டாவது பைப்லைன் திட்டம்:
காயல்பட்டினத்தின் நீண்டநாள் கனவான இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம் தற்போது தமிழக அரசின் மூலம் நனவாக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடங்கல்களைத் தகர்த்தெறிந்து, பணிகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற ஆவன செய்த தமிழக அரசுக்கும், உயர்திரு. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, தமிழக அரசின் அனைத்துத் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். |