காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான - பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று
வருகின்றன.
சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்திற்கான - நிதி உதவியை மத்திய அரசும் (80%), மாநில அரசும் (10%)
வழங்குகின்றன. எஞ்சிய 10 சதவீத தொகையை (சுமார் 3 கோடி ரூபாய்) காயல்பட்டினம் நகராட்சி வழங்குகிறது.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நட்டும் விழா காயல்பட்டினத்தில் மார்ச் 10 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா - மே 9 அன்று துவக்கியும் வைத்தார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக - காயல்பட்டினம் எல்.எப். சாலை அருகில் உள்ள கீழலட்சுமிபுர பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும்பணி (பணிகளின் மதிப்பு சுமார் 43 லட்ச ரூபாய்) - சமீபத்தில் துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. பொன்னன்குறிச்சியில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் இந்த தொட்டியில் முதலில் ஏற்றப்பட்டு - நகரின் இதர தொட்டிகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.
இங்கு தற்போது நடைபெற்று வரும் பணிகளை - ஜூலை 23 அன்று நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன். திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத்துறை மண்டல அலுவலர், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ஒப்பந்ததார நிறுவனமான ஸ்ரீராம் இ.பி.சி. அலுவலர்களும் உடனிருந்தனர்.
பொன்னன்குறிச்சியில் சில நாட்களாக தடைப்பெற்றிருந்த பணிகள் சமீபத்தில் மீண்டும் துவங்கின. அங்கு தற்போது நடைபெற்றுவரும் பணிகளையும் ஜூலை 23 அன்று நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத்துறை மண்டல அலுவலர், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
அங்கு தற்போது - 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாள நீர் தேக்கம் அமைக்கும் பணி (UNDERGROUND SUMP), ஆற்று படுகையில் 6 ஆழ் கிணறுகள் (INFILTRATION WELLS) அமைக்கும் பணி (ஒவ்வொன்றும் 4.5 மீட்டர் விட்டம், 9 மீட்டர் ஆழம்), நிலத்தினை சுற்றி தடுப்புச்சுவர் [மதிப்பீடு: 7 லட்ச ரூபாய்], ஆகியவை தற்போது துவக்கப்பட்டுள்ளன.
மேலும் குடிநீர் திட்டத்திற்கான மின் ஊழியர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டும் பணி, பம்ப் இல்லம் அமைக்கும் பணி [மதிப்பீடு: 7 லட்ச ரூபாய்] ஆகியவையும் இங்கு விரைவில் தொடரும்.
பொன்னன்குறிச்சியில் இருந்து காயல்பட்டினம் வரை - சாலை ஓரமாக, 27 கிலோமீட்டர் தூரத்திற்கு - குழாய்கள் தற்போது இறக்கப்பட்டு வருகிறது.
தலைக்கு 135 லிட்டர் தண்ணீர் (LPCD) என்ற அளவில் - காயல்பட்டினத்தின் 2040-ம் ஆண்டு மக்கள் தொகையை (சுமார் 57,000) அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டு தேவையான் தினசரி 77 லட்ச லிட்டர் அளவிலான தண்ணீர் - இத்திட்டம் மூலம் வழங்கமுடியும்.
புகைப்படங்கள் உதவி:
எம்.எம். முஜாஹித் அலி |