கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது, உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடைத் தொகையாக ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் நகர்நல நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி குறித்து அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறையேகன் திருப்பெயரால்!
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 18ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இம்மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில், தோஹா கோல்டன் ஃபோர்க் ஹோட்டலில், மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அடுத்து, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - மர்ஹூம் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீயின் மருமகன் ஏ.கே.ஜெய்லானீ வாழ்த்துரை வழங்கினார்.
மன்றத்தின் பொறுப்பாளர் ‘டொஷிபா’ முஹ்யித்தீன் தம்பி - மன்றத்தின் நிதிநிலையறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர், ‘ரமழானின் சிறப்புகள்’ என்ற தலைப்பில், ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ சிறப்புரையாற்றினார். மன்றத்தின் நகர்நல செயல்பாடுகளையும் அவர் தனதுரையில் வாழ்த்திப் பேசினார்.
அடுத்து, மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உரையாற்றினார். அனைவருக்கும் ரமழான் வாழ்த்துக்களைக் கூறி தனதுரையைத் துவக்கிய அவர், மன்றம் இதுவரை ஆற்றியுள்ள பணிகளையும், இனி செய்ய திட்டமிட்டுள்ள பணிகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
மன்றத்தின் அனைத்துப் பணிகளுக்கும் உறுதுணையாயிருந்த அனைத்து அங்கத்தினருக்கும் அவர் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
சர்க்கரை நோய் விழிப்புணர்க்காக மன்றத்தால் நடத்தப்படும் மினி மாரத்தான் - குறு நீள் ஓட்டப் போட்டியை வழமை போல இவ்வாண்டும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், புற்றுநோயின் கோரத் தாக்குதல் குறித்து விளக்கிப் பேசி, அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் புகைப்பழக்கத்தை இதுவரை கைவிடாதவர்கள், நடப்பு ரமழானை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அவசியம் கைவிட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
“உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் காயலர்கள் மற்றும் சகோதர மன்றங்கள், சமூக சேவை அமைப்புகளோடு இணைந்து, கத்தர் காயல் நல மன்றத்தின் அங்கத்தினராகிய நாம், தாய் மண்ணுக்காக, சமரசமின்றி தனது சேவையைத் தொடர்ந்து சேவையாற்றுவோம்” என உறுதியுடன் கூறினார்.
விரைவில் மணவாழ்வு காணவுள்ள மன்றத்து மலர்கள் ஃபரூக் அப்துல்லாஹ் (ஆகஸ்ட் 17), செய்யித் இஸ்மாஈல் (செப்டம்பர் 08), கத்தீப் ஹபீப் ஷமீம் (செப்டம்பர் 08) ஆகியோரை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், அவர்களின் மணவாழ்வு சிறக்க மன்றத்தின் சார்பில் வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
பின்னர், மன்ற உறுப்பினர்கள் - மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை, அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெட்டியில் ஆர்வமுடன் நன்கொடையாக சேர்த்தனர்.
இதன்மூலம், ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் தொகை நகர்நல நிதியாக சேகரிக்கப்பட்டது. அத்தொகை மன்றக் கருவூலத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ துஆ இறைஞ்ச, கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மஃரிபுக்கான அதான் - பாங்கோசை ஒலிக்கப்பட்டதும், அனைவரும் புனிதமிகு நோன்பைத் துறந்து, மகிழ்ச்சியுடன் உணவுப் பதார்த்தங்களை உட்கொண்டு மகிழ்ந்தனர்.
பொதுக்கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும், எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி (மம்மி), செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |