காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை சார்பில், இம்மாதம் 27ஆம் தேதியன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வார விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்றுவிப்பதற்காக இயங்கி வரும் நிறுவனம் - மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை.
இந்நிறுவனத்தின் சார்பில், அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட அங்கத்தினர் பங்கேற்கும் வகையில், ஆண்டுதோறும் ரமழான் 17ஆம் நாள் - பத்ர் ஸஹாபாக்கள் நினைவு நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு, பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாளான புனித ரமழான் மாதம் பிறை 17 அன்று (ஜூலை 27) மத்ரஸா மாணவர்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கேக், சம்ஸா, கட்லெட், தண்ணீர் பாக்கெட், மத்ரஸா இயங்கி வரும் புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கறி கஞ்சி ஆகியன பரிமாறப்பட்டன. மஃரிபு தொழுகைக்குப் பின், மாணவர்கள் அனைவருக்கும் பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்) வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மத்ரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களான பாளையம் முஹம்மத் அப்துல் காதிர், அய்யூப், ஹாஃபிழ் நஈம் உதுமான், அப்துல் அஜீஸ், கலீஃபா ஸதக்கத்துல்லாஹ், முஹம்மத் அலீ, ஷேக் அப்துல் காதிர், மஹ்மூத் புள்ளலெப்பை, தாகிப், சுலைமான், சுல்தான் அப்துல் காதிர், யூஸுஃப் ஆகியோரும், மத்ரஸா மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
ஆசிரியர்
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை
புதுப்பள்ளி வளாகம் - காயல்பட்டினம் |