காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துளள் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் சார்பில், அப்பள்ளியில் பணியாற்றும் இமாம் தங்குவதற்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு டியூஷன் பயிற்றுவிப்பதற்கும் என புதிய கட்டிடம் ஒன்று - ரூபாய் 8 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கட்டிட திறப்பு விழா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி, 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தீனிய்யாத் பிரிவு மாணவர் ஆஷிக் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களையோதி, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி அமைந்துள்ள சரித்திரம் குறித்து விளக்கிய அவர், பள்ளியின் இமாம் தங்குவதற்காக கீழ் தளமும், மாணவர்கள் பள்ளிக்கல்வி பயிலுவதற்காக மேல் தளமும் என மொத்தம் ரூபாய் 8 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த செலவுத் தொகையில் இதுவரை ரூபாய் 4 லட்சம் வரை மட்டுமே நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இவ்வகைக்காக, நகர தனவந்தர்களும், ஆர்வலர்களும் தாராள நிதியளித்து உதவுமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்.
உரையாற்றிய மார்க்க அறிஞர்கள் இருவரும், இப்பள்ளியில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் மக்கள் நல செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்ததோடு, மற்ற பள்ளிகளைப் போலல்லாமல் - முழுக்க முழுக்க காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் நம்பியிருக்கும் இப்பள்ளி நிர்வாகத்திற்கு, புதிய கட்டிடம் கட்டிய வகையில் தேவைப்படும் கூடுதல் தொகையான ரூபாய் 4 லட்சத்தை ஆர்வத்துடன் வாரி வழங்கி, நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திப் பேசினர்.
பின்னர், புதிய கட்டிடம் கட்டிய வகைக்காக - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் தொகை நன்கொடை காசோலையாக வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் முன்னிலையில், அதன் முன்னாள் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை காசோலையை வழங்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் - ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் பெற்றுக்கொண்டார்.
அடுத்து, இப்பள்ளியின் தீனிய்யாத் - மார்க்கக் கல்விப் பிரிவில் பயிலும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடைகளும், பள்ளியைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் மீனவ மக்களுக்கு ரமழான் உணவுப் பொருட்களும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேடையில் முன்னிலை வகித்தோர் - அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர மக்களின் நன்கொடை நிதியால் கட்டப்பட்ட ‘முத்துக்கெட்டி’ எம்.டி.எஸ்.காதர் நினைவு கட்டிடம் திறக்கப்பட்டது.
அனைவரின் தக்பீர் முழக்கத்திற்கிடையே - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் சார்பில், ஹாஜி வாவு சித்தீக் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் துஆ ஓத - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பிரமுகர்கள், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் நன்கொடையாளர்கள், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மஃரிப் தொழுகைக்கான அதான் (அழைப்பொலி) ஒலிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் நோன்பு துறந்தனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், பிரியாணி கஞ்சி, மட்டன் ரோல்ஸ், ப்ளம் கேக், உளுந்து வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார். தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் தேனீர் பரிமாறப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் என்.எம்.மீரான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |