ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில் பணியாற்றி வந்த - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த (தற்போதைய முகவரி - ஜீலானி நகர்) எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் இம்மாதம் 24ஆம் தேதி (அமீரக நேரப் படி) மாலை 04.30 மணியளவில் துபை - அல்பராஹாவிலுள்ள துபை மருத்துவமனையில் காலமானார்.
அந்நாட்டு சட்ட விதிகளின்படி, பதிவுப்பணிகள் நிறைவுற்றுள்ளதையடுத்து, நேற்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், அவரது ஜனாஸா - துபை அல்கூஸ் (Al Quoz) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், அன்று மதியம் சுமார் 02.00 மணியளவில், ஜனாஸாவை அடக்குவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் யாவும் நிறைவுற்றன.
நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக, மறைந்த ஜாமிஉல் அக்பரின் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் காயல்பட்டினத்திலிருந்து துபையிலுள்ள அல்கூஸ் அடக்கஸ்தலத்திற்கு, மதியம் 03.00 மணியளவில் வந்து சேர்ந்தனர். மதியம் 03.45 மணியளவில், ஜனாஸா - ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
நல்லடக்கம் குறித்த தகவல்கள், காயலர்களுக்கும் - மர்ஹூமுக்கு அறிமுகமான இதர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் மின்னஞ்சல், கைபேசி குறுஞ்செய்தி, இணையதள செய்தி உள்ளிட்ட தகவல் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, குறித்த நேரத்திற்கு முன்பாகவே காயலர்கள், கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் என மர்ஹூமுக்கு அறிமுகமான சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடக்கஸ்தலத்தில் திரண்டிருந்தனர்.
ஜனாஸாவை - அடக்கஸ்தல ஊழியர்களும், காயலர்களும் இணைந்து குளிப்பாட்டினர். பின்னர், ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. துவக்கமாக, மனைவி, மகள், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினரும், அவர்களைத் தொடர்ந்து அனைவரும் ஜனாஸாவைப் பார்த்தனர்.
அஸ்ர் தொழுகைக்குப் பின், ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, இரங்கல் உரையாற்றினார். கீழக்கரையைச் சேர்ந்த மவ்லவீ அப்பாஸ் ஆலிம் துஆ இறைஞ்சினார்.
பின்னர், ஆம்புலன் வாகனம் மூலமாக துபை அல்கூஸ் அடக்கஸ்தலத்திற்கு ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மர்ஹூமின் உறவினர்களுடன் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடைபெற்றது. மர்ஹூமின் மைத்துனர், மருமக்கள் உள்ளிட்ட உறவினர்கள் முன்னிற்க, அனைவரும் அவர்களுடன் முஸாஃபஹா (கைலாகு) செய்தனர்.
அனைத்துக் கிரியைகளும் நிறைவுற்றதையடுத்து, மர்ஹூமின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியவர்களாக அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
ஜனாஸா நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், மர்ஹூமின் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்பும், மர்ஹூம் அவர்களுடன் ஒன்றாக அறையில் தங்கியிருந்தவர்கள் துக்கம் தாளாமல் நீண்ட நேரம் கண்ணீர் சிந்தி அழுதது அனைவரையும் இரக்கத்தில் ஆழ்த்தியது.
களத்தொகுப்பு & படங்கள்:
சாளை ஷேக் ஸலீம்
துபை - ஐக்கிய அரபு அமீரகம் |