தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், ஸஹர் உணவுபசரிப்புடன் நடந்தேறியுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பொதுக்குழுக் கூட்டம்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் எமது தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் சஹர் உணவு நிகழ்வு, 28.07.2013 ஞாயிறு அதிகாலை 12.30 மணியளவில் மன்றத்தின் துணைச் செயலார் சன் மூன் ஸ்டார் எம்.எச்.அபுல் மஆலீ இல்லத்தில் நடைபெற்றது.
தக்வா தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையேற்ற இக்கூட்டத்தில், ஹாஜி நத்தர் ஸாஹிப், ஹாஜி எல்.எஸ்.ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் ஜாவியா பைத்துல்மால் அமைப்பின் முக்கிய பொறுப்பாளரும், வடக்கு ஆத்தூர் ஹிஃப்ழு மதரசாவின் அமைப்பாளருமாகிய மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.நூஹ் என்ற நூஹ் ஹாஃபிஸா இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கூட்ட நிகழ்வுகள்:
விரைவில் மணவாழ்வு காணவுள்ள மணாளர் ஹாஃபிழ் எம்.எம்.ஷேக் ஸதக்கத்துல்லாஹ் இறைமறையின் தோற்றுவாய் அத்தியாய வசனங்களுடன் கூட்டத்தை இனிதே துவக்கி வைத்தார்.
தூக்கத்தைத் துறந்து துடிப்புடன் திரளாகக் குழுமியிருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுப் பேசினார் எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர்.காஜா நவாஸ்.
தலைமையுரை:
தொடர்ந்து, மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
‘இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்
எல்லாருடனும் இணங்கி வாழ்வோம்
அருள் நிறைந்த - ஒரு நன்மைக்கு பல மடங்கு வாரி வழங்கும் வளம் பொருந்திய நன்மாதத்தின் நடுநிசியில் நம் காயல் நகர்நலனுக்காகக் கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காடு கடல் கடந்து நாம் வாழ் வாதாரத்தைத் தேட வந்தாலும் கடந்து வந்த பாதையை மறவாமல் திரும்பிப் பார்க்கும் நம் மக்களின் மனப் பக்குவம் போற்றத் தகுந்தது.
பிற மன்றங்களின் சேவை...
சிங்கப்பூர், துபை மற்றும் அராபிய காயல் நல மன்றங்கள் நம் நகர்நலத் திட்டங்களை அதிகளவில் செய்கின்றனர்.
சிங்கப்பூர் மன்றம் ஊரில் பல திட்டங்களைச் செய்வதுடன் ஊரிலுள்ள உயர் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு அங்கு போய் வேலைவாய்ப்பு பெற்றிட ஒரு தள மேடை (PLATFORM) உருவாக்கிக் கொடுத்து, அவர்கள் வேலை பெறும் வரை ஒத்தாசை புரிந்து, ஒப்பற்ற பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது.
தக்வாவின் எண்ணமும், முயற்சிகளும்...
அதே போன்று, நம் ஊர் மக்களின் எண்ணிக்கையை பாங்காக்கிலும் உயர்த்த நாமும் பல வழிகளை யோசித்து வருகின்றோம். இங்குள்ள பணிக் குடியேற்றல் சட்டம் சற்று கடினமாக இருப்பதாலும், தாய்லாந்து மொழி பேசுதல் என்பது பணியமர்த்தலில் கட்டாயமாகக் கருதப்படுவதாலும், மற்ற நாடுகளைப் போன்று இங்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. இருப்பினும் தொடர்ந்து நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே பணியிலிருக்கும் நம் சகோதரர்கள், அவரவர்களின் பணியிடங்களிலோ அல்லது தொடர்புள்ள நிறுவனங்களிலோ தொடராக முயன்று, ஒருவர் இன்னொருவருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றிட உதவினால், வந்தவர் மற்றொருவரைக் கொணர முயற்சிப்பார். இந்தத் தொடர்ச்சி தொடருமானால் நம் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிடும். குறைந்தபட்சம் உங்களின் நெருங்கிய உறவினர் - நண்பர் என ஒருவருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்! எண்ணிக்கை தானாக விரிவடைவதைப் பார்க்கலாம்.
இமாம் - பிலால் பெருநாள் ஊக்கத்தொகை...
ரமலான் மாதம் நம் ஊரிலுள்ள பள்ளிகளின் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு உலக காயல் நல மன்றங்களின் ஒத்தாசையோடு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நாம் சென்ற ஆண்டு முதல் முன்னின்று நடத்தி வருகின்றோம். இவ்வாண்டும் தொடராகச் செய்வதற்கு உலக காயல் மன்றங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்.
கல்வி - மருத்துவ உதவித்தொகை...
இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் நமதூரின் ஏழை - எளிய மாணவ-மாணவியர் உயர்கல்விக்கு உதவி வருகிறோம்.
புதிதாக அமையவுள்ள மருத்துவ கூட்டமைப்பு ஷிஃபாவில் அங்கத்தினராக இணைந்துள்ளோம்.
KEPA சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பிற்கு, தேவையான நேரங்களில் உதவி வருகிறோம். மேலும் தேவைகளுக்கு உதவுவதாகவும் வாக்களித்துள்ளோம்.
முழு ஒத்துழைப்பு தேவை...
இவ்வாறு நலத்திட்டப் பணிகள் நிறையவே நம்மிடம் உள்ளன. மேலும் சீரோடும், சிறப்போடும் பொலிவுடன் செய்ய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் ஒருங்கே தேவைப்படுகின்றன.
குறிப்பாக சந்தா தொகையை ஒருவர் கூட நிலுவையில்லாமல் செலுத்திவிடுங்கள்! அல்லாஹு தஆலா நம் அனைவரது தொழிலிலும் விருத்தியையும், வளத்தையும் நிறைவாகத் தருவான். அதற்காக வேண்டி துஆ செய்தவனாக எனதுரையை நிறைவு செய்கிறேன்...
இவ்வாறு, மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
செயலர் உரை:
அடுத்து, மன்றச் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார்.
ஸஹர் உணவேற்பாடு...
தக்வாவின் சார்பில் நோன்பு துறப்பு நிகழ்வோ, நோற்கும் நிகழ்வோ இதுவரையில் நாம் நடத்தியதில்லை. காரணம் ஒவ்வொரு நாளும் நாம் நோன்பு துறப்பு நேரத்தில் ஒன்று கூடுகிறோம்... நம்மூர் பாரம்பரிய முறையில் கஞ்சி. வடை, கடற்பாசி உணவுகளுடன் பள்ளியில் நோன்பு துறக்கிறோம்... எனவே ஒன்று கூடல் என்பது அவசியப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், தம்பி அபுல் மஆலீ, என்.எஸ்.ஷேக், இர்ஃபான் போன்றோர் - ஸஹர் நேர ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்து, நம்மூர் பாரம்பரிய களரி சாப்பாடுடன் நோன்பு நோற்கும் நிகழ்வை வைக்க விருப்பம் தெரிவித்தனர்.
அனுசரணையாளருக்கு நன்றி...
“தக்வாவிற்கு உபரியாக செலவு வருமே...?” என்று சொன்னபோது, அச்செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தம்பி அபுல் மஆலீ சொன்னதன் அடிப்படையில், இன்று அசாதாரணமான ஒரு நேரத்தில், மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதற்காக தம்பி அபுல் மஆலீக்கு மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவருக்கு வாழ்த்து...
அடுத்து, அண்மையில் தாய்லாந்து நவமணி மற்றும் நகை வணிகர்கள் கூட்டமைப்பிற்கு (THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATIION) நடைபெற்ற தேர்தலில், நம் தலைவர் வாவு சம்சுத்தீன் அவர்கள் நிறைந்த வாக்குகளைப் பெற்று தேர்வானதுடன், அதன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டதற்கு நம் மன்றத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாருடனும் அன்புடன் பழகுதல், எல்லாருக்கும் உதவுதல் என்ற அவர்களின் பண்பின் காரணமாக அவர் இன்று தாய்லாந்து நாட்டினரால் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களால் இப்பதவி அழைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
நகர்நலப் பணிகள்...
சென்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ரூ.17,000 செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
தீவுத் தெரு அரசு துவக்கப் பள்ளியில் வகுப்புத் தரை மற்றும் கழிப்பறை சீரமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு இதுவரையில் வந்து சேராததால் அப்பணி நடைபெறாமல் உள்ளது.
சாலை சந்திப்புகளில் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, நிறுவுவதற்காக குவிவிழிக் கண்ணாடி ஒன்று மட்டும் வாங்கியுள்ளோம். அதனை சோதனை முறையில் பொருத்திய பின், பயனுள்ளதாக அமையும் பட்சத்தில் மேலும் பல வாங்க நம் மன்றம் திட்டமிட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான பயனுள்ள நூல்களை நம்மூர் நூலகங்களில் இடம்பெறச் செய்யும் பணிகள் நோன்புப் பெருநாள் கழித்து இன்ஷா அல்லாஹ் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்ட முயற்சிகள்...
தக்வாவின் முனைப்பில் செயல் வடிவம் பெற்றுள்ள இமாம் - பிலால்களின் ரமழான் ஊக்கத்தொகை தொடர்பாக அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதுடன், இச்செயல்திட்டம் குறித்து அனைத்து காயல் செய்தி ஊடகங்களுக்கு செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு சில மன்றங்கள் மட்டுமே தங்களின் பங்களிப்புத் தொகையை தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் தங்கள் மன்றத்தில் கலந்தாலோசித்து சொல்வதாகக் கூறியுள்ளனர். ஒரு சில தனிநபர்களும் தங்களின் பங்களிப்பைத் தந்துள்ளனர். ஏறத்தாழ அனைத்து மன்றங்களின் முக்கியமானவர்களிடம் தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு பேசியும் வருகின்றோம்.
நம்மூரில் 36 பள்ளிகள் உள்ளன. இமாம் பிலால் 72 பேர் உள்ளனர். தலா 5000 ரூபாயாவது கொடுத்தால் தான் அவர்களின் தேவை ஓரளவாவது நிறைவேறும். மன்றத்தின் சார்பாக இவ்வாண்டு ரூ.50,000 கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நமக்குத் தேவை ரூ.3,60,000. ஒரு சில மன்றங்களே இதுவரையில் வாக்களித்துள்ளதை பார்க்கும்போது நம்முடைய இலக்குத் தொகையை அடைய முடியுமா என்ற சந்தேகம்தான் வருகிறது.
என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவெனில், நாம் தனிப்பட்ட முறையிலும் நம் பங்களிப்பை அளிப்போமேயானால் ஓரளவு இலக்குத் தொகையை அடைந்து விடலாம். விருப்பமானவர்கள் சொல்லுங்கள்...
இவ்வாறு செயலாளர் சொன்னதுமத், மள மளவென மன்ற உறுப்பினர்கள் இவ்வகைக்காக மனமுவந்து தங்களின் தொகைகளைச் சொல்ல, இறுதியில் ரூ.85,000 நிதி திரண்டுவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
தொடர்ந்து செயலாளர் பேசியதாவது:-
ஷிஃபாவுக்கு நிர்வாகச் செலவினம்...
ஷிஃபா மருத்துவ கூட்டமைப்பில் இணைந்துள்ளோம். கட்டமைப்பிற்காக ரூ.25,000 வழங்கியுள்ளோம். ஆண்டுதோறும் செலவினங்களுக்காக ரூ.25,000 கொடுக்கவும் வாக்களித்துள்ளோம்.
தொழில் உதவி...
இதுவரையில் நாம் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகள் ஓரளவு செய்துள்ளோம். தற்போது நம்மிடம் ஒரு கணிசமான தொகை எஞ்சி இருக்கிறது. அதைக் கொண்டு நம் மக்களின் வாழ்வாதார தொழிலுக்கு உதவலாம். இதன் மூலம் அவர்கள் வாழ்வு மேம்படுவதுடன், பிறரைச் சார்ந்து வாழ்வதை விட்டும் விடுதலை பெறுவர் என்பது என் கருத்து.
ஆனால் இதில் ஒத்த கருத்து அல்லது பெரும்பான்மைக் கருத்து பிரதிபலித்தால் மட்டுமே செயல்படுத்துவோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, மன்றச் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார்.
தொழிலுதவி குறித்த கருத்துப் பரிமாற்றம்:
நீண்ட நேர விவாதத்திற்குப் பின், மேலும் சில அமர்வுகள் ஆய்விற்குப் பின் இது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என்றும், தற்போது சோதனை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் தொழிலுதவி கொடுத்துப் பார்க்கலாம் என்றும், JTCயில் ஒரு கடையை தக்வா வாடகைக்கு எடுத்து மேல் வாடகைக்கு விடலாம் என்றும் உறுப்பினர்களால் கருத்து பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
அடுத்து, சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.நூஹ் உரையாற்றினார். அவரது உரை விபரம் வருமாறு:-
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.சாந்தி சமாதானம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், உத்தம சஹாபாக்கள், சாலிஹீன்கள், ஷுஹதாக்கள் மற்றும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
நள்ளிரவில் கூட்டம் - வியப்பாக உள்ளது...:
இரவு நேரத்தில் கூட்டத்தை வைத்திருக்கிறீர்களே, ஆட்கள் வருவார்களா என யோசித்துக் கொண்டிருந்தேன். மாஷா அல்லாஹ் ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களும் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
நல்ல திட்டங்கள்...
இந்தக் கூட்டத்தின் நிகழ்வுகளை துவக்கம் முதல் கவனித்து வந்தபோது, அழகான பல திட்டங்களை அருமையாக செயல் வடிவம் கொடுத்து செய்து வருகிறீர்கள் என்பதை உணர முடிகிறது.
இமாம் பிலால்கள் ஊக்கத்தொகை தொடர்பாக உங்கள் செயலாளர் நன்றாக விளக்கிப் பேசினார். இறைப் பணியில் ஈடுபட்டுள்ள இமாம் பிலால்கள் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது என்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் கவுரவமாகவும், மானம்-மரியாதையுடனும் வாழ வழிவகுக்க வேண்டியது நம் யாவரின் கடமை. இதை உங்கள் மன்றம் நன்றாக உணர்ந்து, குறைந்த பட்சம் பெருநாட்கள் போன்ற சந்தோசமான நாட்களிலாவது அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே என்ற உணர்வில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க உலக காயல் மன்றங்களின் ஒத்தாசையுடன் செயல்படுத்தி வருகிறீர்கள்.
உங்கள் மன்றத்தின் சார்பாக ரூ.50,000 அளித்ததுடன், உங்கள் தலைவரும் செயலாளரும் வைத்த வேண்டுகோளை ஏற்று, உடனடியாக ரூ.85,000 தனித்தனியாகவும் வழங்கியுள்ளீர்கள். மாஷாஅல்லாஹ்! எனக்கு வியப்பாக உள்ளது. அல்லாஹு தஆலா உங்களுக்கு மேலும் அதிகமான பரக்கத்தைத் தர வேண்டி துஆ செய்கிறேன்.
சிறுதொழில் செய்வோருக்கு உதவுதல் தொடர்பாக செயலாளர் சொன்ன கருத்தில் நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதையும் நான் அவதானித்தேன். சாதக பாதகங்கள் இரண்டுமே உண்டுதான். பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றிவிடுவாரோ...? தொழில் செய்யாமல் ஓடி விடுவாரோ...? என்ற அச்சமெல்லாம் நியாமானதே. அதற்காக வழங்காமலும் இருக்க முடியாது. ஓரளவு அவரின் முன் நடவடிக்கைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அவர் மீது நம்பிக்கை ஏற்படும்.
மஹல்லாக்கள்தோறும் பைத்துல்மால் அமைத்தல்...
இதற்குத் தீர்வு மஹல்லாக்கள்தோறும் பைத்துல் மால் நிறுவுதல் மூலமே சாத்தியப்படும். ஒவ்வொரு மஹல்லாவிலும் பைத்துல்மால் அமைந்தால் மட்டுமே அந்தந்த மஹல்லாவைச் சார்ந்தவர்களுக்கு அந்த மஹல்லாவாசியான பயனாளியின் பின்னணி விளங்கும். எனவே ஏமாறுதல் என்ற நிலைமை பொதுவாக ஏற்படாது.
பைத்துல்மாலை அமைக்கும்போது, இரண்டு வகையான நிதியை வையுங்கள். ஒன்று உதவித் தொகை மற்றும் அவசர செலவினங்களுக்கு உதவுதல். மற்றொன்று அழகிய கடன் திட்டம். நகை அடமானத்தின் பேரில் மட்டும் வழங்கப்படும் குறுகிய கால வட்டியில்லா கடன் திட்டம். அதிகபட்சம் ஆறு மாதங்கள்.தவணை முறையிலும் கடனை அடைக்கலாம்.
ஒரு பைத்துல்மாலின் பொறுப்பாளராக இருப்பதால் அதில் ஏற்படும் பிரச்சனைகளை நுணுக்கமாகக் கையாள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்திருக்கிறோம். நம்முடைய நோக்கம் நம் மக்களுக்கு உதவவேண்டும். ஹராமான வட்டிக்குப் போகாமல் அவர்களைத் தடுக்க வேண்டும். மேலும் வட்டிக்காரனிடம் நம் மக்கள் மானம் மரியாதையை இழக்கக் கூடாது என்பதுமே.
சில நேரங்களில் வட்டியின்றி அழகிய கடன் பெற்றவர்கள், நாம் கடனைத் திருப்பக் கோரும்போது நம்மிடம் மரியாதைக் குறைவாக நடக்கும் நிகழ்வுகளும் உண்டு. ஆனாலும் நாம் அவர்களிடம் கண்ணியமாகப் பேசி அவர்களைப் புரிய வைக்கின்றோம். ஏனெனில் நம்முடைய நோக்கம் அவர் வட்டிக்கு போய்விடக்கூடாது என்பது மட்டுமே.
மருத்துவ கூட்டமைப்பின் அவசியம்...
அடுத்து, ஷிஃபா கூட்டமைப்பை பற்றி இங்கு அழகாக விளக்கிப் பேசப்பட்டது. அருமையான திட்டம். அவசியமான அமைப்பு. நோயாளிக்கு சரியான வழிகாட்டுதல் இன்றிதான் அவர்களின் நோய் முற்றிவிடுகிறது அல்லது கடுமையான செலவிற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மேலும் வசதி குறைந்தவர்கள் தனிப்பட்ட நபர்களிடம் போய் சிறுகச் சிறுக சேகரித்து அவர்கள் சிறுத்துப் போவதை விட, கவுரவமான ஓர் அமைப்பில் கவுரவமான ஒரு தொகையைப் பெற்று சிகிச்சை பெறுவது நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தன்மானத்தைப் பாதுகாக்கும் அம்சமாகும்.
இன்று வரக்கூடிய நோய்களும் சுபுஹானல்லாஹ் மிகக் கொடிய நோய்களாக உள்ளன. நோயாளியின் வீட்டிற்கு சென்று அவர்களின் பரிதாபாத்தைக் கேட்கவே மனம் குலுங்குகிறது. புற்றுநோய், சிறு நீரக செயலிழப்பு நோய், இதய மாற்று வழி அறுவை சிகிச்சை இன்னும் எத்தனை எத்தனையோ.
பொருளாதாரக் குறைவுள்ளவர்கள் இவ்வளவு லட்சங்களை எங்கே போய் புரட்டுவார்கள். இந்த மாதிரி அமைப்புதான் உங்களைப் போன்ற மன்றங்களை அணுகி நிதித் திரட்டி அவர்களுக்கு வாழ்வு அளிக்க முடியும்.
உங்கள் மன்றமும் அதில் ஓர் அங்கம் என்ற செய்தி மிகவும் சந்தோசமாக உள்ளது. அல்லாஹு தஆலா உங்கள் அனைவருக்கும் நல்ல சரீர சுகத்தையும், தொழிலில் நல்ல பரக்கத்தையும் தருவானகவும் என துஆ செய்தவனாக அமர்கிறேன். வ ஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்.
இவ்வாறு, சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் நூஹ் உரையாற்றினார்.
தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு:
வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள - தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்விற்கு, தக்வாவின் சார்பாக 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இன்பச் சுற்றுலா:
அக்டோபர் 19, 20, 21 தேதிகளில் தக்வாவின் சார்பில் - உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட நிறைவு:
மன்ற துணைச் செயலாளர் எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் நன்றி கூற, சிறப்பு விருந்தினர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் நூஹ் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
ஸஹர் உணவு விருந்துபசரிப்பு:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஸஹர் உணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறாக, தக்வாவின் பொதுக்குழு மற்றும் ஸஹர் விருந்துபசரிப்பு நிகழ்வுகள் அமைந்திருந்தன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான் |