திருச்செந்தூரில் அமைக்கப்படுவதாக இருந்த உலகிலேயே உயரமான முருகன் சிலை, கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் அமைக்கப்படும் என ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் ஆஷிஷ்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தோனுகால் கிராமத்தில 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் ஹாக்கி மைதானமும், மீதமுள்ள இடங்களில் ஸ்டேடியம், அலுவலகம், வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகறிது. இதற்காக 4 மோட்டார் படகுகள் விரைவில் வரவழைக்கப்பட உள்ளன.
தூத்துக்குடி, ஸ்பிக் நகர் சுற்றுலா மாளிகையின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட உப்பள நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் குத்தகையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு உப்பள அதிபர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளார்.
டிசிடபிள்யூ தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பது தொடர்பாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், இந்த ரசாயண கழிவுகள் கலந்த நீர் ஆய்விற்காக கேரளாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னர், ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட விருந்தது. ஆனால், ஆகம விதியப்படி அங்கு சிலை அமைக்க வாய்ப்பில்லை. எனவே, கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் முருகன் கோவிலில், உயரமான முருகன் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது என்று ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.
பேட்டியின் போது மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்திட அரசு சார்பில் மூன்று பள்ளிகளுக்கு தலா ரூ.2500க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
தகவல்:
www.tutyonline.com |