சென்னை எழும்பூர் - குருவாயூர் மார்க்கத்தில் விரைவு வண்டி (16127/16128), ஜனவரி 18, 2003 முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் காலை 7:40 மணிக்கு புறப்படும் இந்த வண்டி, குருவாயூரை மறுநாள் காலை 6:20 மணி அளவில் சென்றடைகிறது. திரும்பும் மார்க்கத்தில் குருவாயூரில் இருந்து இரவு 9:10 மணி அளவில் புறப்படும் இந்த வண்டி, சென்னை எழும்பூரை மறுநாள் இரவு 9:15 மணி சென்றடைகிறது.
இந்த பாதையில் தற்போது இணைப்பு சேவையாக தென்னக ரயில்வே - சென்னை - மதுரை (16129/16130) மார்க்கத்தில் 8 ரயில் பெட்டிகளை இணைக்கிறது. 8 ரயில் பெட்டிகளில் 6 ரயில் பெட்டிகள் பதிவு செய்த அமர்வு (Seating) பெட்டிகள். 1 ரயில் பெட்டி - பதிவில்லாத அமர்வு பெட்டி. மற்றொன்று பார்சல் பெட்டியாகும். இந்த சேவை - தூத்துக்குடி வரை, ஜூலை 31 முதல் நீட்டிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
புதிய வண்டி சென்னையில் (16130) இருந்து காலை 7:40 மணிக்கு புறப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தை மாலை 6:35 மணிக்கு வந்தடையும். அங்கு இதர 15 ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, திருநெல்வேலி வழியாக குருவாயூர் நோக்கி செல்லும். எஞ்சிய 8 பெட்டிகள் மணியாச்சியில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தை இரவு 8:35 மணிக்கு சென்றடையும்.
மேலும் இந்த வண்டி தூத்துக்குடியில் (16129) இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு, மணியாச்சி ரயில் நிலையத்தை 8:30 மணிக்கு அடையும். மணியாச்சி ரயில் நிலையத்தில் - குருவாயூரில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை எழும்பூர் வரை செல்லும் வண்டியின் 15 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு காலை 8:35 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இரவு 9:15 மணிக்கு சென்றடையும்.
இந்த புதிய ரயில் சேவையை ஜூலை 31 புதனன்று - சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைக்க உள்ளனர் என தென்னக ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. |