தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் பகல் நேர இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ஜெயதுரை எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கனவான, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலும், தூத்துக்குடியில் இருந்து சென்னை வரையிலும் பகல் நேர ரயிலை இயக்க
வேண்டும் என்று மத்திய அரசுக்கு தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மத்திய அரசு பகல் நேர ரயில் இயக்குவதற்கு ரயில்வே துறை
ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி-சென்னை பகல் நேர இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில்
நடைபெற்ற துவக்க விழாவிற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோக்கி தலைமை வகித்தார். தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
ஜெயதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஜெயதுரை எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி பனிமய ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகத்திடம்
கோரிக்கை விடுக்க்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். தென் மாவட்டங்களின் வளர்ச்சிகாக
காரைக்குடி - ராமநாதபுரம், தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ஓரமாக புதிய ரயில் தடம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று
வருகிறது.
மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்க நான் வலியுறுத்தி வந்தேன். இதன் பயனாக எனது கோரிக்கை ஏற்கப்பட்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளியிடப்பட்டது. அந்த திட்டத்தினை நிறைவேற்றவும் நான் தொடர்ந்து வலியுறுத்துவேன். இதுபோன்று தூத்துக்குடிக்கு மேலும் புதிய ரயில்கள் இயக்கப்பட
உள்ளது என்றார்.
விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் அஜித்குமார், சீனியர் மெக்கானிக்கல் பொறியாளர் சிதம்பரவேலன், தெற்கு ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர்
வேணுகோபால், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், சொர்ணலதா, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க தலைவர் கல்யாண
சுந்தரம், செயலாளர் பிரம்மநாயகம், பாத்திமாபாபு, விவிடி கோடீஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி - சென்னை பகல் நேர ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் மகிழ்சியை தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் இயக்கப்படுவதால்
வணிகர்கள், பொதுமக்கள், குறிப்பாக முதியோர்கள், பெண்கள் பெரிதும் விரும்புவர். முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை மட்டுமே நம்பியிருந்தவர்ளுக்கு இது ஒரு
வரப்பிரசாதம் என்று தூத்துக்குடி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர்–தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16129) சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35
மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
தூத்துக்குடி–சென்னை எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16130) தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 7.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு
சென்னை எழும்பூர் சென்றடையும்.
இந்த ரயில் சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரசுடன் வாஞ்சிமணியாச்சியில் வைத்து இணைக்கப்படும்.
தகவல்:
www.tutyonline.com
|