காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில், ‘மஸ்ஜிதுத் தவ்பா’ எனும் பெயரில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. இதனை அறிமுகப்படுத்தும் நோக்குடன், இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில், பள்ளி அமைவிடம் அருகிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸாவில் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
“நபித்தோழர்களும் நாமும்” எனும் தலைப்பில் மவ்லவீ எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை ‘எல்.டி.எஸ். கோல்டு ஹவுஸ்’ ஹாஜி எல்.டி.சித்தீக் நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் முஜீப் நன்றி கூறினார்.
பின்னர் துவங்கிய நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், தேனீர் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்திலும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனவந்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயிதேமில்லத் நகர் அறக்கட்டளை சார்பில், ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித் தலைமையில், எம்.எச்.அப்துல் வாஹித் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
காயிதேமில்லத் நகர் பகுதியில் குர்ஆன் மத்ரஸாவுடன் கூடிய பள்ளிவாயில் கட்டுவதற்காக, காயிதேமில்லத் நகர் அறக்கட்டளை சார்பில் நிலம் நன்கொடையாகப் பெறப்பட்டு, அவ்விடத்தில் பள்ளிவாசல் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
கீழ்தளம், மேல்தளம் என 3600 சதுர அடியில் - சுமார் 50 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், தற்போது கீழ்தள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளி கட்டி முடிக்கப்படும் வரை, நாள்தோறும் ஐவேளை தொழுகை, ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் காலையில் சிறப்பு சொற்பொழிவு, இரவுத் தொழுகை ஆகியன - அன்னை கதீஜா மத்ரஸாவில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
M.A.அப்துல் ஜப்பார் |