சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஒரு நாள் சம்பளத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 46-ஆவது பொதுக்குழுக் கூட்டம் 26.07.2013 வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நிகழ்ச்சியுடன், ஃபத்ஹாவிலுள்ள ஷிஃபா அல்ஜஸீரா பாலிக்ளினிக் பார்ட்டி ஹாலில், மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகரது மகன் ஜனாப் அப்துல் அஜீம் அஜ்வர், ஜனாப். செய்யித் பாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
‘இன்னிசைத் தென்றல்’ குளம் எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களான - இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகரது மகன் ஜனாப் அப்துல் அஜீம் அஜ்வர், ஜனாப். செய்யித் பாஜி ஆகியோரையும் மற்றும் அனைவரையும் வரவேற்றார்.
பெண்களுக்கான சிறிய அளவிலான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை (Small Scale Self Employment Scheme) இம்மன்றத்தின் அடுத்த படிநிலையாக விரிவாக்கம் செய்ய அலோசனை வழங்கி தனது கருத்தைப் பதிவு செய்தார்.
அடுத்து, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களைப் (கட் ஆஃப்) பெற்ற மாணவர்களுக்கு - மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் இவ்வாண்டும் 30 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.36,500 பணப்பரிசுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதுபோன்ற சேவைகள் இறைவனின் பொருத்தத்தை நாடி தோய்வின்றி நடந்தேற, உறுப்பினர்கள் தங்கள் சந்தாக்களை முறையாக செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துரை:
அடுத்து, செயலாளர் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் பேசினார். அமைப்பினரின் முழு ஈடுபாடே வெற்றிக்கு காரணம் என்றும், இரக்கச் சிந்தனை, உதவும் மனப்பான்மை, தம்மை வளர்த்தவர்களை கண்ணியப்படுத்துதல் ஆகியவற்றை நாம் கடைப்பிடித்தால் இறைவன் மென்மேலும் பரக்கத் செய்வான் என்றும், ''ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்” என்ற நபிமொழியை மேற்கோள் காட்டியும் இச்சேவையின் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
RKWA-வின் செயல்பாடுகள்:
அடுத்து, மன்ற ஆலோசகர் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கி உரையாற்றினார்.
இம்மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவைகள் குறித்தும் அவர் விரிவுற எடுத்துரைத்தார்.
மேலும், “விசுவாசம் கொண்டோர்களே, எவர்கள் தங்களுடைய பொருட்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 2:274) என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியையும் கூறி தர்மத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.
ரமழான் உணவு திட்டம்:
அடுத்து, மன்றத்தின் உதவி பொருளாளர் ஒய்.ஏ.எஸ். ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் உரையாற்றினார்.
ரமழான் உணவுத் திட்டம் பற்றி அவர் கூறுகையில், இவ்வருடம் ஒரு குடும்பத்திற்கு ரூ.2,431 மதிப்பில், 72 குடும்பங்களுக்கு - மொத்தம் ரூ.1,75,032 செலவில், உணவுப் பொருட்களை மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் மூலம் பயனாளிகளின் முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கை:
மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் ஏ.டி.ஸூஃபீ இப்ராஹீம் சமர்ப்பித்தார்.
2013ஆம் ஆண்டு, மொத்தம் ரூ.8,78,732 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில்
மருத்துவத்திற்காக ரூ.4,70,500
கல்விக்காக ரூ.98,500
சிறுதொழிலுக்காக ரூ.25,000
இதர உதவிகளுக்காக ரூ.2,84,732
என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, இவற்றுக்காக ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:
மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதில், உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
சிறப்புக் குலுக்கல்:
பொதுக்குழுக் கூட்டத்தின் ஓரம்சமாக, மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் குலுக்கல் நடத்தப்பட்டு, பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, சிறப்பு விருந்தினர்களும், மன்றத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழுவினரும் தம் கரங்களால் வழங்கினர்.
ஒரு நாள் ஊதிய நன்கொடை திட்டம்:
இப்பொதுக்குழுவின்போது, மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக உறுப்பினர்கள் தமது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
உறுப்பினர்கள் தமது ஒருநாள் ஊதிய தொகையை - வைக்கப்பட்டிருந்த வெள்ளை உறையில் வைத்து பெட்டியில் இட்டனர். பின்னர், உறுப்பினர்கள் முன்னிலையில் கணக்கிடப்பட்டு, மொத்தம் ரூ.66,561 நன்கொடை நிதியாகத் திரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் என்.எம்.செய்யித் இஸ்மாயில் நன்றியுரையாற்ற, ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீனின் இறைப் பிரார்த்தனைக்குப் பின் நிகழ்ச்சிகள் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். துவக்கமாக செயற்குழுவினரும், அவர்களைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் படமெடுக்கப்பட்டனர்.
மஃரிப் வேளையானதும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், பிரியாணி கஞ்சி, கடற்பாசி, குளிர்பானம், வடை வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஹாஃபிழ்.S.A.C.அஹ்மது ஸாலிஹ்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம் (RKWA)
ரியாத் - சஊதி அரபிய்யா |