காயல்பட்டினம் புறவழிச் சாலையில் (பை-பாஸ் ரோடு), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி காயல்பட்டினம் நகர கிளையின் முழு நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஓலைக் கொட்டகையில் - நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் புறவழிச் சாலையில், பெண்கள் தொழுவதற்கு இடமில்லாததை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளிடம் நிதியுதவிக்கு ஏற்பாடு செய்து தரக் கோரினர்.
அதனடிப்படையில், முஸ்லிம் மாணவர் பேரவை தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் தலைமையில், அதன் காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர துணை அமைப்பாளர் எச்.எல்.அப்துல் பாஸித் உள்ளிட்ட அங்கத்தினர் முயற்சிகளை மேற்கொண்டனர். நகர தனவந்தர்களை சந்தித்து, இதற்கான அவர்கள் நிதி திரட்டினர்.
இதுகுறித்து, நகர முஸ்லிம் லீக் நிர்வாகத்திடமும் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அண்மையில், அக்கட்சியின் நகர கிளை அலுவலகத்தில் இம்மாதம் 05ஆம் தேதியன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திலும், அதன் தொடர்ச்சியாக - காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நகர முஸ்லிம் லீக் சார்பில் இம்மாதம் 07ஆம் தேதியன்று நடத்தப்பட்ட “இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்க” நிகழ்வின்போதும் இவ்வகைக்காக நிதி திரட்டப்பட்டு, கருத்தரங்கின் நிறைவில், அப்பகுதி பொறுப்பாளரிடம் மொத்த நிதியும் கையளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பெண்கள் தொழுவதற்கான ஓலைக் கொட்டகை அமைக்கப்பட்டு, நடப்பு ரமழான் மாதத்தில் நாள்தோறும் இரவில் அங்கு இஷா மற்றும் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இத்தொழுகையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இவ்வகைக்காக நிதி திரட்டுவதில் உதவிய நகர முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கும், நன்கொடையாளர்களுக்கும், நகர முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.C.சுஹைல் இப்றாஹீம்
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |