காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இம்மாதம் 09ஆம் தேதி மாலையில், சென்னை காந்தி பீச்சில் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
அல்ஹம்துலில்லாஹ். நேற்று (09-08-2013) அன்று பெருநாள் தினத்தை முன்னிட்டு KCGC –யால் திடீரென அறிவிக்கப்பட்ட அழைப்பின் பெயரில் சென்னை மெரீனா பீச்சின் ஒரு பகுதியான காந்திபீச்சில் மாலை 5.00 மணி முதல் சென்னை வாழ் காயலர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடினர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மக்ரிப் தொழுகை கடற்கரையிலேயே ஜமாஅத்துடன் நடத்தப்பட்டது. பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டியுடன் குளிர்பானமும் பரிமாறப்பட்டது.
ஒன்று கூடலில் கலந்து கொண்டோர் அனைவரும் பரஸ்பரம் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்குப் பின் தம் சொந்த பந்தங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் நீண்ட உரையாடலில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தாம் மாநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு குடும்பத்துடன் செல்ல இருந்ததாகவும் இந்த அழைப்பு கிடைத்தவுடன் பெருமகிழ்ச்சியோடு இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதால் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தம் சொந்தங்களை ஒரே இடத்தில் பார்க்க முடிவதால் நிறைய நேரம் மிச்சப்படுவதாகவும், செலவுகளும் குறைவதாகவும் கூறினார்.
பின்னர் இஷா தொழுகையும் ஜமாஅத்துடன் நடைபெற்றதை அடுத்து ஒவ்வொரு குடும்பமாக வந்திருந்தோர் இல்லம் திரும்பினர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
படங்கள்:
குளம் முஹம்மத் தம்பி & இஸ்ஸத்தீன் |