அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை வார்ட் 17 தவிர இதர வார்டுகள் அனைத்திலும் முழுமையாக முடிவடைந்துள்ளது. 17ஆவது வார்டு பொதுமக்களிடம் தற்போது விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களில், பல்வேறு காரணங்களால் விபரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் போன பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் மூன்று நாட்களாக (ஆகஸ்ட் 08, 09, 10 தேதிகளில்), காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சொந்த ஊரான காயல்பட்டினம் வந்துள்ள பொதுமக்களும், உள்ளூரிலிருந்தும் சில காரணங்களால் முகாமில் கலந்துகொள்ள இயலாமற்போன பொதுமக்களும் இம்முகாமில் கலந்துகொண்டு, விபரங்களை சமர்ப்பித்தனர்.
முதல் நாளன்று சுமார் 250 பேரும், இரண்டாம் நாளன்று சுமார் 800 பேரும், மூன்றாம் நாளன்று சுமார் 600 பேரும் - ஆக மொத்தம் மூன்று நாட்களில் சுமார் 1650 பேர் - இம்முகாமில் தமது விபரங்களை பதிவு செய்தனர்.
பதிவு செய்ய மேலும் பலர் காத்திருப்பதை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு முகாம் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. இப்போது - இந்த சிறப்பு முகாம் நான்காவது நாளாக ஆகஸ்ட் 11 ஞாயிறு அன்றும் எல்.கே. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடரும். நான்காம் நாளுக்கான டோக்கன் - பள்ளிக்கூட வளாகத்தில் காலை 7:30 மணி முதல் வழங்கப்படும் என காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தெரிவித்துள்ளார்.
|