காயல்பட்டினத்தில், இம்மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (இன்று) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன.
நிறைவில், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
நேற்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.
கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இருப்பதற்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கேட்டுக்கொண்டதன் பேரில் காவல்துறையினர் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – சொளுக்கார் தெரு சந்திப்பு மற்றும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – கொச்சியார் தெரு சந்திப்பில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, கொச்சியார் தெருவிற்குள் அவற்றை நிறுத்துமாறு பணித்தனர். இதனால், போக்குவரத்து சீராக இருந்தது.
அதுபோல, இயலாநிலை குழந்தைகளுக்காக இயங்கி வரும் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் கிளையின் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றுக்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 09 - பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள் விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நோன்புப் பெருநாளன்று மாலை கடற்கரை காட்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |